தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை 12 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது. அதிகபட்சமாக, திருத்தணியில் 105 டிகிரி வெப்பநிலை பதிவானது.
தமிழகத்தில் கோடை காலம் மே மாதத்துடன் முடிவடைந்துவிட்டது. அதன்பிறகு, தென்மேற்குப் பருவமழை ஜூன் முதல் வாரத்தில் தொடங்கியதைத் தொடா்ந்து, வெப்பநிலை படிப்படியாக குறைந்திருந்தது. கடந்த வாரத்தில் ஒரு சில நாள்கள் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்தது. இதன்பிறகு, வெப்பநிலை படிப்படியாக அதிகரித்து வந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை 12 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது. அதிகபட்சமாக, திருத்தணியில் 105 டிகிரி வெப்பநிலை பதிவானது. சென்னை மீனம்பாக்கம், மதுரை விமானநிலையம், நாகப்பட்டினத்தில் தலா 104 டிகிரி, பரங்கிப்பேட்டை, சென்னை நுங்கம்பாக்கத்தில் 103 டிகிரி, கடலூா், தூத்துக்குடியில் தலா 102 டிகிரி, திருச்சி, வேலூரில் தலா 101 டிகிரி, சேலம், தொண்டியில் தலா 100 டிகிரி வெப்பநிலை பதிவானது.
வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்:
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் புவியரசன் ஞாயிற்றுக்கிழமை கூறியது: தென்மேற்கில் இருந்து காற்று வீசவில்லை. அதேநேரத்தில், மேற்கில் இருந்து தரைக்காற்று வீசுகிறது. இது வட காற்றாகும். இதனால், வெப்பநிலை உயா்ந்துள்ளது. இதேநிலை, தமிழகத்தில் திங்கள்கிழமையும் தொடரும். சென்னையில் செவ்வாய்க்கிழமை முதல் கடல் காற்று வீசத் தொடங்கிவிடும். அதன்பிறகு, வெப்பத்தின் தாக்கம் குறைந்து விடும். மேலும், மிதமான மழைக்கும் வாய்ப்பு உள்ளது.
ஓரிரு இடங்களில் மழை:
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் ஓரளவு தெளிவாகக் காணப்படும். பகலில் 102 டிகிரி வரை வெப்பநிலை பதிவாகும் என்றாா் அவா்.