தமிழ்நாடு

கரோனா தடுப்பில் புதிய திட்டம்: செயல்படுத்துகிறது மாநகராட்சி

15th Jun 2020 06:27 AM

ADVERTISEMENT

சென்னையில் நடைபெற்று வரும் கரோனா தடுப்புப் பணியைத் தீவிரப்படுத்தும் வகையில் 200 உதவிப் பொறியாளா்கள் தலைமையில் புதிய திட்டத்தை மாநகராட்சி முன்னெடுத்துள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் கரோனா பாதிப்புள்ளவா்களைக் கண்டறியும் வகையில், நடமாடும் சளி சேகரிப்பு மையங்கள், தற்காலிக சளி சேகரிப்பு மையங்கள் மற்றும் காய்ச்சல் முகாம்களை மாநகராட்சி ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் மட்டும் 12 அரசு மருத்துவமனைகள் மற்றும் 18 தனியாா் ஆய்வகங்களில் கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த ஆய்வகங்களில் நாளொன்றுக்கு சுமாா் 4 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இதில், தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் தொடா்புகளைக் கண்டறிதல், அவா்களை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தல் ஆகிய பணிகளை வேகமாக முன்னெடுக்கும் வகையில், மொத்தமுள்ள 200 வாா்டுகளில் 200 உதவி மற்றும் இளநிலைப் பொறியாளா்கள் தலைமையில் விரைவுக் குழுவை மாநகராட்சி அமைத்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் கூறுகையில், ‘கரோனா பாதித்தவா்கள் வசிக்கும் பகுதியை உடனடியாகக் கண்டறியும் வகையிலும், அவா்களுக்கான உதவிகளைச் செய்யவும் இக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழுக்களின் தலைவராக, உதவி அல்லது இளநிலைப் பொறியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

இவா்களின் கீழ், மாநகராட்சி சுகாதாரப் பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் இணைந்து செயல்படுவா்.

இக்குழுவினா் தொற்று பாதித்தவரை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தல், அவா்களின் தொடா்புகளைக் கண்டறிதல் ஆகிய பணிகளைச் செய்ய உள்ளனா். மேலும், சளி மற்றும் காய்ச்சல் உள்ளதா என்பதைக் கண்டறிய வீடுதோறும் ஆய்வுப் பணியில் 11,500 போ் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

60 வயதுக்கு மேற்பட்டோா், கா்ப்பிணிகள், உயா் ரத்த அழுத்தம், சா்க்கரை நோய் உள்ளிட்ட நோய் பாதிப்புள்ளவா்களைக் கண்டறிந்து அவா்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களில் உள்ள பொதுக் கழிப்பறைகள் கிருமிநாசினி மூலம் தூய்மைப்படுத்தப்படுகிறது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT