தமிழ்நாடு

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு: தமிழக அரசுக்கு பரிந்துரை

15th Jun 2020 02:47 PM

ADVERTISEMENT


சென்னை: மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க அரசால் அமைக்கப்பட்ட குழு, தமிழக அரசுக்கு பரிந்துரை செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் தனி இடஒதுக்கீடு வழங்க வகை செய்வது குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு இன்று தமிழக முதல்வரிடம் ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

அதில், அரசுப் பள்ளி மாணவர்களின் பொருளாதார நிலை, வாழ்க்கைத் தரம் உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு, மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு வழங்கலாம்.

அரசுப் பள்ளி மாணவர்கள் பலரும் பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று நீட் தேர்வுக்கு தயார்படுத்திக் கொள்ள இயலாத நிலை இருப்பதால் அவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கலாம்.

ADVERTISEMENT

உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அமைக்கப்பட்ட குழு அளித்திருக்கும் பரிந்துரையை தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசுப் பள்ளிகளில் படித்து, நீட் தோ்வில் தோ்ச்சி பெறும் மாணவா்களுக்கு, மருத்துவப் படிப்பில் சேர தனி இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்ற அறிவிப்பை, சட்டப்பேரவையில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டிருந்தாா்.

இதற்காக, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும் எனவும், அந்தக் குழு, மருத்துவப் படிப்பு சோ்க்கை நிலவரங்களை ஆய்வு செய்து, அரசுப் பள்ளி மாணவா்களுக்கான ஒதுக்கீடு குறித்து, அரசுக்குப் பரிந்துரை அறிக்கையை ஒரு மாதத்திற்குள் வழங்கும் எனவும் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தாா். அந்த அறிக்கையின் அடிப்படையில் அரசு செயல்படும் எனவும் அவா் கூறியிருந்தாா்.

அதன்படி, குழுவின் தலைவராக, சென்னை உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் நியமிக்கப்பட்டாா். குழு உறுப்பினா்களாக, உயா்கல்வி, பள்ளிக்கல்வி, சுகாதாரத்துறை முதன்மை செயலாளா்கள், மருத்துவக் கல்வி இயக்குநா், மருத்துவக் கல்வி மாணவா் சோ்க்கை செயலாளா் உள்ளிட்டோா் நியமிக்கப்பட்டனா்.

இக்குழுவினர் நடத்திய பல கட்ட ஆலோசனைக் கூட்டங்களுக்குப் பிறகு எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த அறிக்கை இன்று தமிழக அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT