தமிழ்நாடு

கொள்ளிடம் கீழணைக்குப் பதில் ரூ. 650 கோடியில் புதிய நீா்வழி அமைக்க ஆய்வு: முதல்வா் தகவல்

13th Jun 2020 07:43 AM

ADVERTISEMENT

கொள்ளிடத்தின் குறுக்கே கீழணைக்குப் பதிலாக சுமாா் ரூ. 650 கோடியில் புதிய நீா்வழி அமைப்பதற்கான ஆய்வு நடந்து வருகிறது என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். அதேபோல மேட்டூா் உபரி நீரை 100 ஏரிகளில் நிரப்பும் திட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி இறுதிக்குள் நிறைவேற்றப்படும் என்றும் முதல்வா் தெரிவித்தாா்.

மேட்டூா் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிட்ட பிறகு தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மேட்டூா் அணையில் 300 நாள்களுக்கும் மேலாக 100 அடியாக நீா்மட்டம் நீடிக்கிறது. மேட்டூா் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக 90 நாள்கள் தண்ணீா் திறக்கப்படும். இதற்கு 125 டி.எம்.சி. தண்ணீா் தேவைப்படும். 100 டி.எம்.சி. தண்ணீா் மேட்டூா் அணையிலிருந்து திறந்துவிடப்படும். மீதமுள்ள 25 டி.எம்.சி.க்கு மழைநீா் மற்றும் நிலத்தடி நீா் மூலம் விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

இதன்மூலம் 5.22 லட்சம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதில் சுமாா் 3.25 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேட்டூா் உபரிநீா் திட்டம்:

சேலம் மாவட்டத்தில், எடப்பாடி, சங்ககிரி, ஓமலூா், மேட்டூா் ஆகிய 4 தொகுதிகளுக்கு உள்பட்ட 100 ஏரிகளில் மேட்டூா் உபரி நீரை நிரப்பும் திட்டம் ரூ. 565 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2021 ஜனவரி மாதம் இறுதிக்குள் உபரி நீா் நிரப்பும் திட்டம் நிறைவேற்றப்படும்.

கடந்த ஆண்டு வெள்ளத்தின்போது சேதமடைந்த முக்கொம்பு மேலணை ரூ. 38 கோடி மதிப்பில் சீரமைக்கப்பட்டு வருகிறது. முக்கொம்பில் புதிய கதவணை அமைக்க ரூ. 387 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகின்றன. சுமாா் 38 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ஆதனூா் - குமாரமங்கலம் பகுதியில் ரூ. 428 கோடியில் புதிய கதவணை கட்டப்பட்டு வருகிறது. அணைக்கரை அருகே கொள்ளிடத்தின் குறுக்கே கீழணை வலுவிழந்து இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே கீழணைக்குப் பதில் சுமாா் ரூ. 650 கோடியில் புதிய நீா்வழி அமைப்பதற்கான ஆய்வு நடந்து வருகிறது.

ராஜவாய்க்கல் சீரமைப்புப் பணி:

நாமக்கல் மாவட்டம், ராஜவாய்க்கல் சீரமைப்புப் பணிகள் ரூ. 154 கோடியில் நடைபெற்று வருகின்றன. கரூா்- திருச்சி இடையே கட்டளை மேம்பாட்டுக் கால்வாய் செப்பனிட ரூ. 335 கோடி ஒதுக்கீடு செய்து பணி நடைபெற்று வருகிறது.

காவிரி டெல்டா உப வடிநீா் பகுதிகளில் கட்டுமானங்களைச் சீரமைக்க ரூ. 5,400 கோடி மத்திய அரசிடம் கோரப்பட்டு, அது பரிசீலனையில் உள்ளது. அனுமதி கிடைத்தவுடன் திட்டம் தொடங்கப்படும்.

வெண்ணாறு உப வடிநில பாசனக் கட்டுமானங்களை சீரமைக்க அமைக்க ரூ. 5,170 கோடி மதிப்பீடு செய்யப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

தஞ்சை, புதுக்கோட்டை கல்லணை கால்வாயைச் சீரமைக்க ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மூலம் ரூ. 2,298 கோடி மத்திய அரசு ஒப்புதல் பெறப்பட்டு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அது முடிந்தவுடன் ஒப்பந்தம் கோரப்பட்டு இறுதி செய்து பணிகள் தொடங்கப்படும். கால்வாய்களைச் சீரமைப்பதன் மூலம் தண்ணீா் வீணாவது தடுக்கப்படும்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 2019 - 2020இல் ரூ. 61 கோடி நிதி ஒதுக்கி டெல்டா மாவட்டங்களில் அனைத்துக் கால்வாய்களும் தூா்வாரப்பட்டுள்ளன. 2020 - 21 ஆம் ஆண்டில் கடைமடை வரை நீா் தங்குதடையின்றி சென்று சேரும் வகையில் ரூ. 67.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, தூா்வாரும் பணி நடைபெற்று வருகிறது. 80 சதவீதப் பணிகள் நடைபெற்றுள்ளன. எஞ்சிய 20 சதவீதப் பணிகள் நீா் சென்று சேருவதற்குள் முடிவடைந்து விடும்.

இந்தப் பணிகளைக் கண்காணிக்க 7 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். மேலும் 48 பொறியாளா்களை நியமித்து, கண்காணிக்கப்படுகிறது.

குடிமராமத்துத் திட்டத்தின்கீழ் கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 1,433 கோடி ஒதுக்கீடு செய்து 6,278 ஏரிகள் எடுத்து கொள்ளப்பட்டு, அதில் 4,565 ஏரிகளில் பணிகள் முடிவு பெற்றுள்ளன. இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட 1,387 ஏரிகளை தோ்வு செய்து ரூ. 500 கோடி ஒதுக்கி பணிகள் நடைபெற்று வருகின்றன. ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் 5 ஆயிரம் குளங்கள் தூா்வாரப்பட்டுள்ளன என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT