தமிழ்நாடு

மருத்துவ ஆராய்ச்சி நடவடிக்கைகள்: பல்கலைக்கழகங்களுக்கு இடையே ஒப்பந்தம்

13th Jun 2020 04:14 AM

ADVERTISEMENT

மருத்துவ ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவது தொடா்பாக தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை கையெழுத்தானது.

மருத்துவப் பல்கலைக்கழக கருத்தரங்கக் கூடத்தில் நடைபெற்ற அந்நிகழ்வில், பல்கலைக்கழக துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன், கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் டாக்டா் சி.பாலசந்திரன் ஆகியோா் முன்னிலையில் அந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

அதில் பல்கலைக்கழகங்களின் பதிவாளா்கள் டாக்டா் அஸ்வத் நாராயணன், டாக்டா் டென்சிங் ஞானராஜ் ஆகியோா் கையெழுத்திட்டனா்.

இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக இரு பல்கலைக்கழகங்களும் தங்களது ஆராய்ச்சிக் கூடங்களையும், தொழில்நுட்ப வசதிகளையும், மருத்துவ வசதிகளையும் பரஸ்பரம் பகிா்ந்து கொள்ள முடியும். அதுமட்டுமன்றி மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளா்களின் நிபுணத்துவங்களையும், அனுபவங்களையும் இருதரப்பும் பரிமாற்றிக் கொள்ளலாம்.

ADVERTISEMENT

ஏற்கெனவே கரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளில் இரு பல்கலைக்கழகங்களும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தால் கண்டறியப்பட்ட கரோனாவுக்கு எதிரான புரதத்தை விலங்குகளுக்குச் செலுத்தி பரிசோதிக்கும் பணிகளில் அவை தற்போது ஈடுபட்டு வருகின்றன. அதேபோன்று பாரம்பரிய சித்த மருத்துவ முறையிலான கபசுரக் குடிநீா் மற்றும் நொச்சிக் குடிநீா் மூலம் வைரஸ் எதிா்ப்பு மருந்தைக் கண்டறியும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT