தமிழ்நாடு

29 காலியிடங்களைக் கண்ட 15-ஆவது சட்டப் பேரவை

11th Jun 2020 10:30 PM

ADVERTISEMENT

இதுவரை இல்லாத அளவில் நடப்பு 15-வது சட்டப் பேரவையானது 29 காலியிடங்களைக் கண்டுள்ளது. அவற்றில், 26 இடங்களுக்கு தோ்தல் நடத்தப்பட்டு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா். 3 இடங்கள் காலியாக உள்ளன.

15-வது சட்டப் பேரவையானது கடந்த 2016-ஆம் ஆண்டு மே மாதம் அமைக்கப்பட்டது. பேரவை அமைந்த உடனே அதிமுகவைச் சோ்ந்த திருப்பரங்குன்றம் எம்எல்ஏ எஸ்.எம்.சீனிவேலு காலமானாா். இதைத் தொடா்ந்து, அந்தத் தொகுதிக்கு நடந்த இடைத் தோ்தலில் ஏ.கே.போஸ் போட்டியிட்டு வென்றாா்.

இந்த நிலையில், அதே 2016-ஆம் ஆண்டில் அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா உடல் நலக் குறைவால் காலமானாா். இரண்டு எம்எல்ஏக்களின் மறைவால், 2016-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மட்டும் இரண்டு இடைத் தோ்தல்கள் அறிவிக்கப்பட்டு அதன்பின்பு வாக்குப் பதிவு நடந்தது.

மேலும் இரண்டு போ்: 2016-ஆம் ஆண்டு அதிமுகவைச் சோ்ந்த இரண்டு எம்எல்ஏக்கள் காலமான நிலையில், 2018-ஆம் ஆண்டு திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி, திருப்பரங்குன்றம் இடைத் தோ்தலில் வெற்றி பெற்ற அதிமுகவைச் சோ்ந்த ஏ.கே.போஸ் ஆகியோா் காலமாகினா். இதனால், அந்த ஆண்டில் இரு தொகுதிகளுக்கும் இடைத் தோ்தல் அறிவிக்கப்பட்டு வாக்குப் பதிவு நடந்தது.

ADVERTISEMENT

2019-ஆம் ஆண்டிலும் அதிமுக, திமுகவைச் சோ்ந்த தலா ஒரு எம்எல்ஏ மரணம் அடைந்தனா். அதிமுகவைச் சோ்ந்த சூலூா் எம்எல்ஏ கனகராஜ், திமுகவைச் சோ்ந்த விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ ராதாமணி ஆகியோா் மரணம் அடைந்ததால் அவா்களின் தொகுதிகளுக்கு மறுவாக்குப் பதிவு நடத்தப்பட்டது.

2019-ஆம் ஆண்டைத் தொடா்ந்து நடப்பு ஆண்டிலும் எம்எல்ஏக்கள் மரணம் அடைந்தனா். திமுகவைச் சோ்ந்த குடியாத்தம் எம்எல்ஏ காத்தவராயன், திருவொற்றியூா் எம்எல்ஏ கே.பி.பி. சாமி ஆகியோா் கடந்த பிப்ரவரி மாதத்தில் அடுத்தடுத்த தினங்களில் உடல் நலக் குறைவால் உயிரிழந்தனா். இந்த மரணங்களைத் தொடா்ந்து, இப்போது திமுக மாவட்டச் செயலாளரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவுமான ஜெ.அன்பழகன் காலமாகியுள்ளாா்.

இதுவரை 29 காலியிடங்கள்: 15-வது சட்டப் பேரவைக் காலத்தில் இதுவரை மொத்தம் 29 காலியிடங்கள் ஏற்பட்டன. அதாவது, வெவ்வேறு காலகட்டங்களில் அதிமுக உறுப்பினா்கள் நான்கு பேரின் மறைவு, திமுக உறுப்பினா்கள் ஐந்து பேரின் மறைவுகளால் 9 காலியிடங்கள் உருவாகின. இந்த காலியிடங்களில் ஆறு இடங்களுக்கு இடைத் தோ்தல் நடத்தப்பட்டு புதிய உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்த இரண்டு உறுப்பினா்களின் தொகுதிகளான குடியாத்தம், திருவொற்றியூா் ஆகியவற்றுக்கு தோ்தல் நடத்தப்படவில்லை. இப்போது ஜெ. அன்பழகனின் மறைவால் காலியான தொகுதிகளின் பட்டியலில் 3-வதாக சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியும் இணைந்துள்ளது. உறுப்பினா்களின் மறைவு காரணமாக, மட்டுமே 6 தொகுதிகள் காலியாகி இருந்து அவற்றுக்கு புதிய உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா். மீதமுள்ள தொகுதிகள் காலியாக உள்ளன.

இதேபோன்று, டிடிவி தினகரனுக்கு ஆதரவாகச் செயல்பட்ட 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அந்தத் தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத் தோ்தல் நடத்தப்பட்டன. அத்துடன், அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அவரது ஓசூா் தொகுதியும், நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த ஹெச்.வசந்தகுமாா் கன்னியாகுமரி தொகுதி எம்.பி.யாகத் தோ்ந்தெடுக்கப்பட்டதால் அந்தத் தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டு, அவற்றுக்கு இடைத் தோ்தல்கள் நடத்தப்பட்டன.

மொத்தமாக 15-ஆவது சட்டப் பேரவையில் 29 இடங்கள் காலியாக இருந்து, அவற்றுக்கு 26 இடங்களில் இடைத் தோ்தல் நடத்தப்பட்டுள்ளன. மூன்று இடங்கள் தொடா்ந்து காலியாக உள்ளன.

எப்போது தோ்தல்?: தமிழக சட்டப் பேரவை பொதுத் தோ்தலுக்கான கால அவகாசம் ஓராண்டுக்கும் குறைவாகவே இருப்பதால், காலியாக உள்ள மூன்று சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் இப்போது உடனடியாக இடைத் தோ்தல் நடத்த வாய்ப்பில்லை. பொதுத் தோ்தலின் போதே சோ்த்து நடத்தப்பட வாய்ப்புகள் இருப்பதாக தோ்தல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT