தமிழ்நாடு

பெட்ரோல் - டீசல் விலையை உயர்த்தும் போக்கை உடனடியாகக் கைவிட வேண்டும்: ஸ்டாலின் வேண்டுகோள்

11th Jun 2020 07:35 PM

ADVERTISEMENT

 

சென்னை: பெட்ரோல் - டீசல் விலையை உயர்த்தும் போக்கை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக வியாழன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து மத்திய அரசும்- தமிழக அரசும் போட்டி போட்டுக் கொண்டு உயர்த்திக் கொண்டிருப்பதற்கு கடும் கண்டனத்தைத்  தெரிவித்துக் கொள்கிறேன்.

ADVERTISEMENT

ஊரடங்கு துவங்கும் போது 72.28 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல், இன்று  77.96 ரூபாய்க்கும்; 65.71 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் டீசல், 70.64 ரூபாய்க்கும் விற்கப்படுவது, வாகனங்கள் வைத்திருப்போரையும், ஏழை - எளிய, நடுத்தர மக்களையும் கடுமையாக பாதித்துள்ளது.

தமிழக அரசின் மதிப்புக் கூட்டு வரி உயர்வு, மத்திய அரசின் தொடர் விலையேற்றம் என்ற இருமுனை தாக்குதலால் சென்னையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 5.68 ரூபாயாகவும், டீசல் விலை 4.93 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

"தினம் ஒரு தகவல்" போல் கடந்த மூன்று தினங்களாகத் தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி வரும் மத்திய அரசு - ஒருபுறம் 'ஊரடங்கு' தளர்வு என அறிவித்து விட்டு, இன்னொரு புறம் 'பெட்ரோல் டீசல் கட்டண உயர்வு' என்று மக்களை வஞ்சித்து வருவது வேதனையளிக்கிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை குறைந்த காலங்களில் அனைத்துப் பயன்களையும் அள்ளி எடுத்துக்  கொண்ட மத்திய பா.ஜ.க. அரசு - 'விலை உயர்வை' மட்டும் மக்களின் தலையில் தூக்கி வைப்பது எந்த வகையில் நியாயம்?

ஆகவே, விலைவாசி உயர்வுக்கும், பேருந்துக் கட்டண உயர்வுக்கும் வழி வகுக்கும், பெட்ரோல் - டீசல் விலையை உயர்த்தும் போக்கை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.  

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : petrol-diesel prices stalin request DMK president ஸ்டாலின் வேண்டுகோள்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT