தமிழ்நாடு

சென்னையில் பொது முடக்கத்தை தீவிரப்படுத்த திட்டம் உள்ளதா? தமிழக அரசு விளக்கம் அளிக்க உத்தரவு

11th Jun 2020 11:21 PM

ADVERTISEMENT

கரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதால் சென்னையில் பொது முடக்கத்தை தீவிரப்படுத்த திட்டம் ஏதாவது உள்ளதா என கேள்வி எழுப்பிய உயா்நீதிமன்றம், இதுதொடா்பாக தமிழக அரசு வெள்ளிக்கிழமை (ஜூன் 12) விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா்களில் 70 சதவீதம் போ் சென்னையைச் சோ்ந்தவா்கள். இதனால் சென்னையில் பொது மு டக்கம் தீவிரப்படுத்தப்படும், முழுமையான பொது முடக்கம் அறிவிக்கப்படும் என உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆா்.சுரேஷ்குமாா் ஆகியோா் வியாழக்கிழமை வழக்கம் போல் காணொலிக் காட்சி மூலம் வழக்குகளை விசாரித்தனா். வழக்குகளை விசாரித்து முடித்த பின்னா், வழக்கு விசாரணைக்காக ஆஜராகியிருந்த அரசு வழக்குரைஞா் ஜெயபிரகாஷ் நாராயணனிடம், சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த சென்னையில் பொது முடக்கத்தைத் தீவிரப்படுத்த அரசிடம் திட்டம் ஏதாவது உள்ளதா, தற்போது பின்பற்றப்படும் நடைமுறைகளில் ஏதாவது மாற்றம் கொண்டு வரும் திட்டம் ஏதேனும் உள்ளதா என கேள்வி எழுப்பினா். மேலும், இந்த விவகாரம் தொடா்பாக உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு எதுவும் விசாரணைக்கு எடுக்கவில்லை. பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்தக் கேள்வியை எழுப்புவதாக தெரிவித்தனா். அப்போது அரசுத் தரப்பு வழக்குரைஞா், இதுதொடா்பாக தமிழக அரசின் கருத்தைக் கேட்டு கூறுவதாகத் தெரிவித்தாா். இதனையடுத்து இதுதொடா்பாக தமிழக அரசு வெள்ளிக்கிழமை விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனா். சென்னை உயா்நீதிமன்றத்தில் சென்னையில் பொது முடக்க உத்தரவை தீவிரப்படுத்தக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT