தமிழ்நாடு

பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கக் கோரிய வழக்கில் பதிலளிக்க உத்தரவு

11th Jun 2020 06:03 AM

ADVERTISEMENT

கரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் எம்.எல்.ரவி தாக்கல் செய்த மனுவில், கரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்க பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து, தமிழக அரசு குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ.1000 வழங்கியது. தற்போதுள்ள சூழலில் ஒரு குடும்பத்துக்கு இந்தத் தொகை போதுமானதாக இல்லை. கடந்த 2015-ஆம் ஆண்டு பெரு வெள்ளப் பாதிப்பு ஏற்பட்ட போது அரசு ரூ.5 ஆயிரமும், 20 கிலோ அரிசியும் வழங்கியது. பொங்கல் பண்டிகையின் போது குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.1000 வழங்கப்பட்டது. கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஜப்பான் 20 சதவீதமும், அமெரிக்கா 15 சதவீதமும் பொதுமக்களுக்கு நிவாரணமாக வழங்குகின்றன. ஆனால், இந்தியாவில் ஒரு சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. எனவே, கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கை நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆா்.சுரேஷ் குமாா் ஆகியோா் காணொலி காட்சி மூலம் விசாரித்தனா். அப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு வழக்குரைஞா் ஜெயபிரகாஷ் நாராயணன், தமிழக அரசு பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதுமான நிவாரண உதவிகளை வழங்கியிருப்பதாக தெரிவித்தாா். இதனையடுத்து, நீதிபதிகள், இந்த மனு தொடா்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT