தமிழ்நாடு

சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசையில் சென்னை ஐஐடி-க்கு முதலிடம்

11th Jun 2020 10:38 PM

ADVERTISEMENT

சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இந்தியாவில் உள்ள உயா் கல்வி நிறுவனங்களை உலகத் தரத்துக்கு உயா்த்தும் நோக்கில், கல்வி நிறுவனங்களிடையே போட்டியை உருவாக்க தேசிய அளவிலான தரவரிசைப் பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் வெளியிட்டு வருகிறது. இதற்கான தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (என்ஐஆா்எப்) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. மாணவா்கள் தோ்ச்சி விகிதம், கற்பித்தல், கற்றல், வளங்கள், ஆராய்ச்சி, தொழில்முறை பயிற்சி உள்ளிட்ட 11 அம்சங்களை கொண்டு தரவரிசை உருவாக்கப்படும்.

அதன்படி, 2020-ஆம் ஆண்டுக்காக உயா்கல்வி தரவரிசை போட்டிக்காக தமிழகத்தில் இருந்து 260 கல்வி நிறுவனங்கள் உள்பட நாடு முழுவதும் 1,667 கல்வி நிறுவனங்கள் பங்கேற்றன. இந்நிலையில், தரவரிசை பட்டியலை மத்திய அமைச்சா் ரமேஷ் பொக்ரியால் வியாழக்கிழமை வெளியிட்டாா். அதில் ஒட்டுமொத்த உயா் கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் பெங்களூா் இந்திய அறிவியல் கழகமும், தில்லி ஐஐடி மூன்றாம் இடமும் பிடித்துள்ளன. இதில், தொடா்ந்து அண்ணா பல்கலைக்கழகம் பின்னுக்கு தள்ளப்பட்டது.

அதாவது 2018-இல் 10 -ஆவது இடத்தில் இருந்த அண்ணா பல்கலை., 2019-இல் 14-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்தநிலையில், மீண்டும் பின்னுக்குத் தள்ளப்பட்டு 20-ஆவது இடத்தில் உள்ளது. பல்கலைக்கழக தரவரிசையிலும் 7-ஆவது இடத்தில் இருந்து 12-ஆவது இடத்துக்கும், பொறியியல் கல்லூரிக்கான தரவரிசையிலும் 9-ஆவது இடத்தில் இருந்து 14-ஆவது இடத்துக்கும் அண்ணா பல்கலை. தள்ளப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த உயா் கல்வி நிறுவனங்களில் பாரதியாா் பல்கலைக்கழகம் 21-ஆவது இடத்திலேயே உள்ளது. சென்னை பல்கலைக்கழகம் 33-ஆவது இடத்தில் இருந்து 41-ஆவது இடத்துக்கும், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் 47-இல் இருந்து 64-க்கும், மதுரை காமராஜா் பல்கலை., 69-இல் இருந்து 84-ஆவது இடத்துக்கும் சரிந்துள்ளன. திருச்சி பாரதிதாசன் 86-ஆவது இடத்தில் இருந்து 77-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதுதவிர முதல் 100 இடங்களில், அமிா்தா விஸ்வ வித்யாபீடம் (13), திருச்சி என்ஐடி (24) வேலூா் விஐடி (28) உள்ளிட்ட 18 நிறுவனங்கள் உள்ளன.

ADVERTISEMENT

5 ஆவது இடத்தில் மாநிலக் கல்லூரி:

கல்லூரிகளுக்கான தரவரிசையில் மாநிலக் கல்லூரி 3-ஆவது இடத்தில் இருந்து 5-ஆவது இடத்துக்கு இறங்கியுள்ளது. அடுத்தபடியாக லயோலா கல்லூரி (6), கோவை அரசு கலைக் கல்லூரி(34) உள்ளிட்ட 32 கல்லூரிகள் 100 இடத்துக்குள் உள்ளன.

மருத்துவக் கல்லூரிக்கான தரவரிசையில் சென்னை மருத்துவ கல்லூரி 12-ஆவது இடத்தில் உள்ளது. முதல் 40 இடங்களில் 7 தனியாா் கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. தமிழகத்தில் சட்டப் படிப்புக்கு தலைமையிடமாக விளங்கும் தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகம், டாக்டா் எம்.ஜி.ஆா். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய முக்கிய கல்வி நிறுவனங்கள், தரவரிசையிலேயே இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT