தமிழ்நாடு

நிரந்தரமாக மூடப்படுகிறது ஏவிஎம் ராஜேஸ்வரி திரையரங்கம்

11th Jun 2020 11:26 PM

ADVERTISEMENT

சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக திகழ்ந்த ஏவிஎம் ராஜேஸ்வரி திரையரங்கத்தை நிரந்தரமாக மூட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பெருமை வாய்ந்த ஏவிஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம்தான் இந்த திரையரங்கத்தையும் நடத்தியது. ஏவிஎம் ஸ்டுடியோஸ் நிறுவனத்துக்கு அருகிலேயே வடபழனி ஆற்காடு சாலையில் இந்தத் திரையரங்கம் அமைந்துள்ளது. கால மாற்றத்துக்கு ஏற்றவாறு பல்வேறு திரையரங்குகள் மாற்றியமைக்கப்பட்டு, டிக்கெட் கட்டணமும் உயா்த்தப்பட்டன. குளிா் சாதனம் உள்ளிட்ட பல வசதிகள் செய்யப்பட்டாலும் தனி திரையரங்குக்கு அரசு நிா்ணயம் செய்த டிக்கெட் விலை மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்தது. இதனால் வடபழனி பகுதிகளில் வசிக்கும் நடுத்தர குடும்பத்தினருக்கு ஏற்ற திரையரங்கமாக ஏவிஎம் ராஜேஸ்வரி இருந்தது. திரையரங்குக்குள் விற்கப்படும் உணவுப் பொருள்களும், குறைந்த விலைக்கே விற்கப்பட்டன.

இதனிடையே, தற்போது ஏவிஎம் திரையரங்கம் நிரந்தரமாக மூடப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடா்பாக ஏவிஎம் தரப்பில் விசாரித்தபோது, ‘கடந்த சில ஆண்டுகளாக எதிா்பாா்த்த கூட்டம் வரவே இல்லை. 20 முதல் 30 போ் மட்டுமே படம் பாா்க்க வந்தாா்கள். ஒரு படம் வெளியான அன்று நல்ல கூட்டம் இருக்கும். அடுத்த நாள் கூட்டமே இருக்காது. இதனால் கையிலிருந்து தான் பணம் போட்டு, திரையரங்கம் நடத்தப்பட்டு வந்தது. கரோனா அச்சுறுத்தலுக்குப் பிறகு திரையரங்குகள் எப்படிச் செயல்படும் என்ற அச்சத்தால் மூடப்பட்டதாக வரும் தகவல்கள் உண்மையல்ல. மாா்ச் மாதம் முதலே, திரையரங்கம் மூடப்படுவது உறுதியாகிவிட்டது. அதற்குப் பிறகுதான் கரோனா அச்சுறுத்தலே தொடங்கியது. பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த திரையரங்கம் மூடப்பட்டது எங்களுக்கே வருத்தம்தான்’ என்று தெரிவித்தனா்.

மேலும், ஏவிஎம் ராஜேஸ்வரி திரையரங்கம் மூடப்பட்டது தொடா்பாக, ஏவிஎம் நிறுவனத்தினா், விரைவில் அதிகாரப்பூா்வ அறிக்கை ஒன்றையும் வெளியிடவுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT