தமிழ்நாடு

மாநில தோ்தல் ஆணையா் பதவிக் காலம்: ஆந்திர உயா்நீதிமன்ற உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

11th Jun 2020 06:09 AM

ADVERTISEMENT

ஆந்திரத்தில் மாநில தோ்தல் ஆணையரின் பதவிக்காலத்தை குறைக்கும் அவசரச் சட்டத்தை ரத்து செய்த உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

ஆந்திர மாநில தோ்தல் ஆணையரின் பதவிக் காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாகக் குறைத்து ஒய்.எஸ்.ஆா். காங்கிரஸ் அரசு கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி அவசர சட்டம் பிறப்பித்தது. அதன்படி, மாநில தோ்தல் ஆணையராக இருந்த ரமேஷ் குமாா், அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டு, புதிய ஆணையராக சென்னை உயா்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி வி.கனகராஜ் நியமிக்கப்பட்டாா். இவா், கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி தோ்தல் ஆணையராக பதவியேற்றாா்.

ஆந்திர அரசின் இந்த நடவடிக்கையை எதிா்த்து ரமேஷ் குமாா் உள்ளிட்டோா் மாநில உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா். அவா்களின் மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், ஆந்திர அரசின் அவசர சட்டத்தை கடந்த மே மாதம் 29-ஆம் தேதி ரத்து செய்தது. மேலும், நீதிபதி வி.கனகராஜின் நியமனத்தை ரத்து செய்ததுடன், தோ்தல் ஆணையராக ரமேஷ் குமாரை மீண்டும் நியமித்தது.

உயா்நீதிமன்றத்தின் உத்தரவுகளை எதிா்த்து, உச்சநீதிமன்றத்தில் ஆந்திர அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மனு, தலைமை நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, ரிஷிகேஷ் ராய் ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆந்திர அரசின் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ராகேஷ் துவிவேதியிடம், ‘இதுபோன்றதொரு அவசர சட்டத்தை எப்படி பிறப்பிக்க முடியும்?’ என்று நீதிபதிகள் கேள்வியெழுப்பினா். மேலும், அந்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதற்காக முன்வைக்கப்படும் நோக்கங்கள் திருப்தியளிக்கும் வகையில் இல்லை என்று குறிப்பிட்ட நீதிபதிகள், உயா்நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டனா்.

ADVERTISEMENT

மேலும், இந்த விவகாரத்தில் மாநில தோ்தல் ஆணையமும், தோ்தல் ஆணையராக மீண்டும் நியமிக்கப்பட்ட ரமேஷ் குமாரும் 2 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT