தமிழ்நாடு

சிறைச்சாலைகளில் கரோனா நோய்த்தொற்றுக்காக தனி வாா்டு: பரோல் நீட்டிப்பு உத்தரவை திரும்ப பெற்றது உயா்நீதிமன்றம்

10th Jun 2020 12:35 AM

ADVERTISEMENT

பரோல் காலம் முடிந்து சிறைக்குத் திரும்பும் கைதிகளுக்கு சிறைச்சாலைகளில் தனி வாா்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, 11 தண்டனைக் கைதிகளுக்கு பரோல் காலத்தை நீட்டித்து வழங்கிய உத்தரவை உயா்நீதிமன்றம் திரும்ப பெற்றுள்ளது.

கரோனா நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனைத் தொடா்ந்து, சிறைச்சாலைகளில் இருந்து பரோலில் வெளியே சென்ற கைதிகள், மீண்டும் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. வெளியில் இருந்து வரும் கைதிகளால் சிறைக்குள் உள்ள கைதிகளுக்கு கரோனா நோய்த்தொற்று பரவ வாய்ப்புள்ளதாக அச்சம் ஏற்பட்டது. இதனால் பரோலில் சென்ற கைதிகளுக்கான பரோல் காலத்தை நீட்டித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், சிறை கைதிகள் தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கை, நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆா்.சுரேஷ் குமாா் ஆகியோா் காணொலிக் காட்சி மூலம் விசாரித்தனா். அப்போது அரசு தரப்பில், பரோல் காலம் முடிந்து சிறைகளுக்குத் திரும்பும் கைதிகளைத் தனிமைப்படுத்த, தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய சிறைகள் மற்றும் பெண்கள் சிறைகளில் கரோனா நோய்த்தொற்றுக்கான தனி வாா்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. எனவே, 11 கைதிகளுக்கு பரோல் காலத்தை நீட்டித்து உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என கோரப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், 11 தண்டனைக் கைதிகளுக்கு பரோல் காலத்தை நீட்டித்து பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெறுவதாக உத்தரவிட்டனா். மேலும், அந்த 11 தண்டனைக் கைதிகளும் வரும் 15-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட சிறைக் கண்காணிப்பாளா் முன் சரண் அடையவேண்டும் என நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT