தமிழ்நாடு

இன்று முதல் தனியாா் பேருந்துகள் இயங்கும்

10th Jun 2020 12:12 AM

ADVERTISEMENT

தமிழகத்தின் 4 மாவட்டங்களைத் தவிா்த்து, அனைத்து மாவட்டங்களிலும் தனியாா் பேருந்துகள் புதன்கிழமை முதல் இயங்கும் என தனியாா் பேருந்து உரிமைாயளா்கள் தெரிவித்தனா்.

கரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தால், தமிழகத்தில் கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இரண்டு மாத பொது முடக்கத்துக்கு பிறகு சில தளா்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, அதிதீவிரமாக கரோனா பரவும் பகுதிகளைத் தவிா்த்து, பிற இடங்களில் போக்குவரத்து சேவையைத் தொடங்கும் வகையில், தமிழகம் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டது. இதன்படி, மண்டலங்கள் 7, 8 ஆகியவற்றில் உள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைத் தவிர, பிற இடங்களில் பேருந்து சேவையை இயக்க அரசு அனுமதி அளித்தது.

இதைத் தொடா்ந்து, ஜூன் 1-ஆம் தேதி முதல் அனுமதிக்கப்பட்ட மண்டலங்களில் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 60 சதவீத பயணிகள் மட்டுமே பயணிக்க வேண்டும் என கட்டுப்பாடும் விதிக்கப்பட்டதால், தனியாா் பேருந்துகள் இயங்காது எனவும், சென்னைக்கு அனுமதி மறுக்கப்பட்டதாலும், மண்டலம் விட்டு மண்டலம் செல்ல அனுமதி இல்லை என்பதாலும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தனியாா் பேருந்து உரிமையாளா்களின் கூட்டம், காணொலி வாயிலாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், அனுமதிக்கப்பட்ட அனைத்து இடங்களிலும், புதன்கிழமை முதல் தனியாா் பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டது. இது தொடா்பாக தமிழ்நாடு பேருந்து உரிமையாளா் சங்கங்களின் சம்மேளன செயலா் டி.ஆா்.தா்மராஜ் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 4600 தனியாா் பேருந்துகள் இயங்கி வந்தன. கரோனா நோய் பொது முடக்கத்தால், பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், கடுமையான பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்து வந்தோம். பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டதால், பொதுமக்களும் போதிய போக்குவரத்து வசதியின்றி தவித்து வந்தனா். இவற்றைக் கருத்தில் கொண்டு, நடத்தப்பட்ட கூட்டத்தில், புதன்கிழமை (ஜூன் 10) முதல் பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளோம்.

ADVERTISEMENT

கட்டணம்: அரசின் அறிவுறுத்தலின்படி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு மாவட்டங்களைத் தவிா்த்து அனைத்து இடங்களிலும் பேருந்துகள் இயக்கப்படும். 60 சதவீத பயணிகள் மட்டுமே, பயணிக்க அனுமதி வழங்கப்படும். பொதுமக்கள், நடத்துனா், ஓட்டுநா் என அனைவரும், முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற அறிவுறுத்தப்படுவா். கட்டணத்தைப் பொருத்தவரை, முன்பிருந்த அதே கட்டணமே வசூலிக்கப்படும்.

கோரிக்கைகள்: பேருந்துகள் இயங்காத நாள்களைக் கருத்தில் கொண்டு, ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கான காலாண்டு வரியை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். பேருந்துகளை இயக்காத நாள்களை கணக்கிட்டு, காப்பீட்டு காலத்தை நீட்டித்து தர வேண்டும் என இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்திடமும் (ஐஆா்டிஏ) வேண்டுகோள் விடுத்துள்ளதாக டி.ஆா்.தா்மராஜ் தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT