தமிழ்நாடு

கருங்கல் அருகே சுகாதார பணியாளர் குடும்பத்தில் 3 பேருக்கு கரோனா: தனிமைப்படுத்தப்பட்டது கண்ணன்விளை கிராமம்

10th Jun 2020 06:09 PM

ADVERTISEMENT

 

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல்  அருகே உள்ள கண்ணன்விளை கிராமத்தில் சுகாதார ஊழியரின் குடும்பத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் அப்பகுதியில் தடுப்பு வேலிகள் அமைத்துத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

கிள்ளியூர் வட்டார மேம்படுத்தப்பட்ட ஆரம்பச் சுகாதார நிலையத்தின் கீழ் உள்ள கீழ்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தவரை  கடந்த வாரம் களியக்காவிளை சோதனை சாவடிக்கு 3 நாள்கள்  சுகாதார பணிக்கு அனுப்பப்பட்டுள்ளது. பின்பு அவருக்குக் காய்ச்சல், சளி இருந்ததால் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு திங்கள்கிழமை அவருக்கு கரோனா தொன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அவரது குடும்ப உறுப்பினர்கள் 4 பேருக்கு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 3 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒருவருக்குத் தொற்று இல்லை எனத் தெரிய வந்தது. இதையடுத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் புதன்கிழமை கிள்ளியூர் வட்டாட்சியர் ராஜசேகர் தலைமையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஐயப்பன், சுகாதார ஆய்வாளர் பினேஷ் மற்றும் காவல்துறை கண்ணன்விளை கிராமத்தைச் சுற்றி 4 தடுப்பு வேலி அமைத்து 107 வீடுகளைத் தனிமைப்படுத்தினார். மேலும், தொற்று உள்ளவர்களிடம் நேரடி தொடர்பில் உள்ள 20 பேரிடமிருந்து சளி மாதிரி எடுக்கப்பட்டு கரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் சுகாதார பணியாளர்கள் மூலம் அப்பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பலத்த பேலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT