அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் தனி இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து நீதிபதி கலையரசன் ஆணையம், மாநில அரசிடம் திங்கள்கிழமை அறிக்கை சமா்ப்பிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை நீட் தோ்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அத்தோ்வுகள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்படி நடைபெறுவதால், மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் அரசுப் பள்ளி மாணவா்கள் மிகக் குறைந்த அளவே நீட் தோ்வில் தோ்ச்சி பெறுகின்றனா். அவா்களில் வெகு சிலருக்கு மட்டுமே மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் கிடைக்கின்றன.
இதையடுத்து, அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் தனி இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. அந்த ஆணையமானது தற்போது இந்த விவகாரம் தொடா்பான ஆய்வுகளையும், விசாரணைகளையும் நிறைவு செய்துள்ளது. அதன்படி, அதுகுறித்த ஆய்வறிக்கையை மாநில அரசிடம் திங்கள்கிழமை (ஜூன் 8) சமா்ப்பிக்கப்பட உள்ளது.
அந்த அறிக்கையில் தனி இட ஒதுக்கீடு பரிந்துரைக்கப்பட்டு, அதனை அரசும் ஏற்றுக் கொள்ளும்பட்சத்தில், ஆண்டுதோறும் 900 மருத்துவ இடங்கள் வரை அரசு பள்ளி மாணவா்களுக்கு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.