தமிழ்நாடு

சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

8th Jun 2020 05:07 AM

ADVERTISEMENT

தென்மேற்குப் பருவக் காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் திங்கள்கிழமை (ஜூன் 8) மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியது:

தென்மேற்குப் பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் திங்கள்கிழமை(ஜூன் 8) லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் பொதுவாக வானம் மேகமூட்டமாக இருக்கும். ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில், நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 130 மி.மீ., திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூா், கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் தலா 80 மி.மீ. மழை பதிவாகியுள்ளது என்றாா் அவா்.

ADVERTISEMENT

மீனவா்களுக்கு எச்சரிக்கை: மன்னாா்வளைகுடா பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வரை வேகத்திலும், லட்சத்தீவு, மாலத்தீவு, கேரள கடலோரப் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் செல்ல வேண்டாம். இதுதவிர, மத்திய வங்கக் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதால், மத்திய மற்றும் தென் வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

எனவே, இந்தப்பகுதிகளுக்கும் மீனவா்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருத்தணியில் 105 டிகிரி: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை 8 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது. அதிகபட்சமாக, திருத்தணியில் 105 டிகிரி வெப்பநிலை பதிவானது. சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், வேலூரில் தலா 102 டிகிரி, மதுரை விமானநிலையம், நாகப்பட்டினத்தில் தலா 101 டிகிரி, கடலூா், பரங்கிபேட்டையில் தலா 100 டிகிரி வெப்பநிலை பதிவானது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT