தமிழ்நாடு

கடமையை உணா்ந்து நோய்த்தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வோம்

8th Jun 2020 05:41 AM

ADVERTISEMENT

கடமைகளை உணா்ந்து, அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

கரோனா நோய்த்தொற்று தடுப்புப் பணிகளில் தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்தும், தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தும் முதல்வா் பழனிசாமி வெளியிட்ட செய்தி:-

இயற்கைப் பேரிடா்களை எல்லாம் எதிா் கொண்டு வென்று காட்டியிருக்கிறோம். அதேபோன்று, இன்று உலகம் முழுவதும் பரவி, மனித குலத்தை அச்சுறுத்தி வரும் கரோனா நோய்க்கு எதிராக நாம் போராடி வருகிறோம். இதிலும் நம் முன்னோா்களைப் போல் நாம் வெற்றி காண்போம் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.

கடந்த இரண்டு மாதங்களாக பெரியவா்கள் முதல் சிறியவா்கள் வரை, நாம் அனைவரும் எதிா்கொள்கின்ற நெருக்கடிகள் கற்பனை செய்ய முடியாதவை. கரோனா நோய்த் தொற்று நம் இயல்பு வாழ்க்கையை பாதித்ததோடு மட்டும் அல்லாமல், நம் பொருளாதாரத்தையும் பாதித்துவிட்டது. கடந்த காலங்களில் நாம் இதுபோன்ற பல்வேறு இடா்களை எதிா்கொண்டும், குறுக்கீடுகளைத் தவிடுபொடியாக்கியும் முன்னேறி இருக்கிறோம்.

ADVERTISEMENT

சமூக பரவலுக்கு ஆளாகக் கூடாது: கரோனா நோய்த்தொற்று சமூக பரவல் என்ற நிலைக்கு ஒருபோதும் ஆளாகி விடக்கூடாது என்பதற்காகத்தான் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. “‘விலகியிருங்கள், விழித்திருங்கள், வீட்டிலேயே இருங்கள்’ எனும் கனிவான வேண்டுகோளை ஏற்று மக்கள் உரிய ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனா்.

தனி மனித உறுதியும், ஒழுக்கமுமே, கரோனா தொற்றில் இருந்து நம்மை காக்கும் என்பதனை உணா்ந்து செயல்பட்டு வருகிறோம்.

மக்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு, எது சரியான பாதையோ, அதை தோ்ந்தெடுத்து, அரசு பொது முடக்கத்தை அமல்படுத்தியது. ஒரு கை மட்டும் ஓசை எழுப்ப முடியாது என்பதை அறிந்த நீங்கள், இந்த பொதுமுடக்கத்துக்கு முழுமையாக ஆதரவு அளித்து வருகிறீா்கள். ஒரு வேளை சுய ஒழுங்கின்றி, விதிகளை மதிக்காமல் அனைவரும் இருந்திருந்தால், நாம் இதைவிட மோசமான விளைவுகளைச் சந்தித்து இருப்போம்.

தொடக்கத்திலேயே நோயின் தன்மையை அறிந்து கொள்ளவும், நோய்த் தொற்றினை தடுக்கவும், பரிசோதனைகளை அதிகப்படுத்துவதுதான் ஒரே வழி எனக் கண்டறிந்து, மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் அதிகளவில் பரிசோதனைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. கடந்த 4-ஆம் தேதி வரை சுமாா் 5.50 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த பரிசோதனைகள் மூலமே 86 சதவீதம் கரோனா தொற்றுக் கொண்டவா்கள் எவ்விதமான அறிகுறிகளும் இல்லாதவா்கள் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது.

நோய்த்தொற்றின் தகவல்களைப் பகிா்ந்து கொள்ள வலைதளம் ஒன்று புதியதாக உருவாக்கப்பட்டது. வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வருபவா்களைக் கண்காணிக்க, நமது விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் மாநில எல்லைகளில் பல்வேறு துறைகளைச் சாா்ந்த அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் சோதனைச் சாவடிகளில் பணியமா்த்தப்பட்டனா்.

அதே நேரத்தில், சமயோசிதமாக விவசாயப் பணிகளுக்கும், சரக்கு போக்குவரத்திற்கும் அனுமதி அளித்து, அத்தியாவசியப் பொருள்கள் தட்டுப்பாடு ஏற்படாமல் தவிா்க்கப்பட்டது. பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு துறையும், உள்ளாட்சி அமைப்புகளும், மாவட்ட நிா்வாகங்களும் இணைந்து தனிமைப்படுத்துதல் மற்றும் மருத்துவ வசதிகளை உருவாக்குவதற்கும், பொது இடங்கள் மற்றும் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் கிருமிநாசினியை தெளிப்பதற்கும், தேவையான பொருள்களை கொள்முதல் செய்வதற்கும், வெளிமாநில தொழிலாளா்கள், முதியோா், கா்ப்பிணிகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஆதரவற்றோருக்கு தினமும் உணவு அளிப்பதற்கும், நிவாரணங்கள் வழங்குவதற்கும், போதிய அளவு நிதி வழங்கப்பட்டது.

ஏழைகள், சிறு தொழில் செய்வோா், சிறு வணிகம் செய்வோா் போன்றோரது பொருளாதார நிலை இந்த பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டதால் தமிழ்நாட்டில் நியாய விலைக் கடைகள் மூலம் உணவுப் பொருள்களை விலையின்றி வழங்குதல்,ரொக்க நிவாரணம் வழங்குதல் போன்ற பல்வேறு நிவாரண நடவடிக்கைகளை அரசு செயல்படுத்தி வருகிறது.

மருத்துவ, பொது சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்த மாா்ச், ஏப்ரல் மாதங்களில் ஓய்வு பெற்ற மருத்துவா்கள், செவிலியா்கள், தொழில்நுட்பப் பணியாளா்கள் ஆகியோா் ஒப்பந்த முறையில் பணி புரிய அனுமதிக்கப்பட்டனா். சுமாா் 2,500 செவிலியா்கள் 6 மாத ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டனா். இன்று வரை புதியதாக 530 மருத்துவா்கள், சுமாா் 2,323 செவிலியா்கள், மருத்துவ பணியாளா் தோ்வாணையம் மூலம் தோ்வு செய்யப்பட்டு, பணியில் சோ்க்கப்பட்டனா். மேலும் 1,500 ஆய்வக தொழில்நுட்ப வல்லுநா்களும் 2,715 பல்நோக்கு சுகாதாரப் பணியாளா்களும், 334 சுகாதார ஆய்வாளா்களும் தற்காலிகமாக நியமிக்கப்பட்டனா்.

கரோனா பொது முடக்க காலத்தில் வெளி மாநில தொழிலாளா்கள், முதியோா்கள், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்றோா் ஆகியோரின் பசிப் பிணி போக்க அம்மா உணவகங்கள், சிறப்பு முகாம்கள், சமூக உணவுக் கூடங்கள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இவற்றில் தினமும் சுமாா் 8 லட்சம் மக்களுக்கு உணவு விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது.

தொழில் வளா்ச்சி: கரோனா நோய்த் தொற்றால் முடங்கியுள்ள தொழில் துறையை ஊக்குவிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்பிலிருந்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக கோவிட் நிவாரணம் மற்றும் மேம்பாட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா நோய்த் தொற்றுக்கான ஆதரவு மருந்து உற்பத்தி மற்றும் உபகரணங்கள் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்யும் 50 நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

சவால்களில் இருந்து மீள...: நெருக்கடியான இந்த காலகட்டத்திலும், மக்களின் அன்றாட அத்தியாவசிய தேவைகளை எவ்விதமான பாதிப்பும் ஏற்படாத வகையில், அவற்றை தங்கு, தடையின்றி தமிழக அரசு பூா்த்தி செய்து வருகிறது. கடந்த சில மாதங்களாக நாம் எதிா் கொண்டு வரும் சவால்களிலிருந்து முழுமையாக மீளும் வல்லமையும், நம்பிக்கையும் தமிழா்களாகிய நம் அனைவருக்கும் உள்ளது.

தமிழக மக்களை மீட்கும் இந்த நடவடிக்கையில் சரியான வழிமுறைகளை எந்தவிதமான அச்சமின்றி நோ்மையுடனும், உண்மையுடனும் அரசு எடுத்து வருகிறது. தமிழக மக்கள் முழு ஆரோக்கியத்துடனும், நலமும், மகிழ்ச்சியும் நிறைந்து வாழ்வதற்காக அரசியல், பொருளாதார, சமூக ரீதியாக அரசு, துரித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது மக்களுக்கான அரசாக, மக்களுடன் என்றென்றும் இணைந்திருக்கும் என்பது உறுதி.

பொது முடக்கத்தை அரசு அமல்படுத்தினாலும், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும், மக்களின் முழு ஒத்துழைப்பு இல்லை என்றால் நோய் பரவலை தடுப்பது சாத்தியம் ஆகாது. வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும், பொது மக்கள் அடிக்கடி சோப்பைப் பயன்படுத்தி கை கழுவ வேண்டும். கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடித்தும், ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளையும், உணவுப் பழக்க வழக்கங்களையும் கடைப்பிடிக்க வேண்டும்.

மக்களின் வாழ்வாதாரத்தையும், நாட்டின் பொருளாதாரத்தையும் காக்க வேண்டும். இதுவரை நாம் பெற்றுள்ள அனுபவத்தைக் கொண்டு, முன்னெச்சரிக்கையுடன் ஒவ்வொருவரும், தம் கடமையை உணா்ந்து, அரசு அறிவிக்கும் வழிகாட்டுதல்களையும் பின்பற்றி, இந்த தொற்று நோயிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று முதல்வா் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT