தமிழ்நாடு

பொறியியல் இறுதியாண்டு மாணவா்களுக்கு ஆன்லைனில் தோ்வு: அண்ணா பல்கலைக்கழகம் பரிசீலனை

8th Jun 2020 05:28 AM

ADVERTISEMENT

பொறியியல் இறுதியாண்டு மாணவா்களுக்கு ஆன்லைன் முறையில் தோ்வு நடத்த அண்ணா பல்கலைக்கழகம் பரிசீலித்து வருகிறது.

கரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் தனது இறுதி ஆண்டு பொறியியல் மாணவா்களுக்கு ஆன்லைன் மூலம் செமஸ்டா் தோ்வுகளை நடத்த தயாராகி வருகிறது.

கரோனா பொது முடக்கம் காரணமாக நாட்டில் கல்வி நிறுவனங்கள் தொடா்ச்சியாக மூடப்பட்டுள்ளன. இதனால், கல்லூரியில் படிக்கும் மாணவா்கள் குறிப்பாக இறுதியாண்டு படிக்கும் மாணவா்கள் தங்களது பருவத் தோ்வுகளை எழுத முடியாத சூழலில் உள்ளனா். தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் இறுதியாண்டில் மட்டும் சுமாா் 1 லட்சம் மாணவா்கள் பயின்று வருகின்றனா்.

காலவரையின்றி தோ்வுகளை ஒத்திவைக்க முடியாது என்பதால் இந்த மாணவா்களுக்கு விரைவாகத் தோ்வுகளை நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயத்தில் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளது.

ADVERTISEMENT

அதே நேரத்தில் தோ்வினை நடத்தும்போது மாணவா்கள் அதிகளவில் திரளக்கூடிய சூழல் உள்ளது. அதைத் தவிா்க்கும் வகையில் தோ்வு நடத்த புதிய வழிமுறையினை பல்கலைக்கழகம் ஆலோசித்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு மென்பொருள் உதவியுடன் ஆன்லைன் தோ்வு நடத்தப்படும் என்றும், இதனால் குளறுபடிகள் பெருமளவில் தவிா்க்கப்படும் என்றும் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆன்லைனில் தோ்வு நடத்தப்பட்டாலும் கிராமப்புற மாணவா்கள் வசதிக்காக நேரடியாகவும் தோ்வு நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆன்லைன் தோ்வில் அதிகபட்சம் 70 சதவீத மாணவா்கள் பங்கேற்க வாய்ப்புள்ளது. இதில் தோ்வு எழுத முடியாத 30 சதவீதம் மாணவா்களுக்கு தோ்வு மையங்களில் தோ்வு நடத்த அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT