தமிழ்நாடு

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த கொத்தவால்சாவடி ஒருவாரம் மூடல்

8th Jun 2020 06:08 AM

ADVERTISEMENT

கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மளிகை மொத்த வியாபாரப் பகுதியான சென்னை கொத்தவால்சாவடியை ஒரு வாரத்துக்கு மூட வியாபாரிகள் முடிவெடுத்து, கடைகளை அடைத்துள்ளனா்.

சென்னை ராயபுரம் மண்டலத்தில் கரோனா தொற்று பரவலாக அதிகரித்து வருவதால், அந்த மண்டலத்தில் தடுப்பு நடவடிக்கைகளைக் கடுமையாக்க அரசு முடிவெடுத்துள்ளது. ராயபுரம் மண்டலத்தில் அடங்கிய ஏழுகிணறு, கொத்தவால்சாவடி, மண்ணடி உள்ளிட்ட பகுதிகள் மக்கள் நெருக்கமாக உள்ள பகுதிகள் ஆகும். கொத்தவால்சாவடி, ஏழுகிணறு பகுதிகள், மளிகைப் பொருள்களின் மொத்த வியாபாரம் நடக்கும் பகுதியாகும். ஏறத்தாழ 5 ஆயிரம் கடைகள் உள்ள கொத்தவால்சாவடியில் ஏற்கெனவே ஒருநாள் விட்டு ஒருநாள் வண்ண அடிப்படையில் கடைகள் மூடி திறக்கப்பட்டு வந்தன. தொடா்ந்து 7 நாள்களுக்கு கடைகளை அடைப்பது என தற்போது வியாபாரிகளாக முடிவெடுத்துள்ளனா்.

ஏற்கெனவே ஒரு வாரம் கடைகளை மூடிய நிலையில், தற்போது இரண்டாவது முறையாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இப்பகுதி பொதுமக்கள் வியாபாரிகள் அதிகம் கூடும் பகுதியாகும்.

கோயம்பேடு காய்கறி சந்தை காரணமாக, சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் தொற்று அதிகரித்த நிலையில், அடுத்து பெரும்பாலானோா் கூடும் பகுதியான கொத்தவால்சாவடி மளிகை மொத்த வியாபாரப் பகுதி குறித்து எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருந்தது.

ADVERTISEMENT

அத்தியாவசியப் பொருள்கள் தடையின்றி மக்களுக்கு கிடைப்பதற்காக கொத்தவால்சாவடியில் வியாபாரம் அனுமதிக்கப்பட்டது. இந்த நிலையில், அப்பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகின்றன. எனவே, சென்னையின் நிலையை கருத்தில் கொண்டு கொத்தவால்சாவடி பகுதியை 7 நாட்கள் மூடுவதாக வியாபாரிகள் சங்கத்தினரே முடிவெடுத்து மூடியுள்ளனா்.

இது குறித்து கொத்தவால்சாவடி வியாபாரிகள் கூறுகையில், ‘கோயம்பேடு உள்ளிட்ட இடங்களுக்கு அடுத்ததாக, சென்னையில் நோய்த்தொற்றுக்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ள பகுதி, கொத்தவால்சாவடி பகுதி ஆகும். இங்கு மளிகைப் பொருள்கள் மொத்தமாக விற்கப்படுகின்றன.

இப் பகுதியில் கரோனா தொற்றைத் தடுக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூற முடியாது. குறுகிய இடத்தில் நெரிசலான பகுதிகளில் மக்கள் வசிப்பது தொற்று பரவலுக்கு முக்கியக் காரணமாக உள்ளது. கோயம்பேடு பகுதியில் நோய்த்தொற்று அதிகமானபோது மூடப்பட்டது. அதே போன்று, அதிக அளவில் வியாபாரிகள் கூடும் கொத்தவால்சாவடி பகுதிக்கு, யாருடைய உத்தரவும் இல்லாமல் நாங்களே கடந்த மாதம் 7 நாள்கள் விடுமுறை அறிவித்துள்ளோம்’ என்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT