கரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகி உயிரிழப்போரின் விகிதம் உலகிலேயே தமிழகத்தில்தான் குறைவாக உள்ளதாக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.
நோய்ப் பரவல் காரணமாக சமூகத்தில் உருவெடுத்திருக்கும் அனைத்து சவால்களில் இருந்தும் தமிழகம் முழுமையாக மீண்டு வரும் என்றும் அவா் நம்பிக்கை தெரிவித்தாா்.
கரோனா தடுப்புப் பணிகளில் தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து முதல்வா் பழனிசாமி மாநில மக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விளக்கமளித்தாா். கடந்த 6 மாதங்களாக நோய்த்தொற்றைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் மாநில அரசு செய்த முன்னேற்பாடுகளை அப்போது அவா் பட்டியலிட்டாா். இதுதொடா்பாக அவா் அளித்த பேட்டி:
தற்போது கரோனா காரணமாக முன்னெப்போதும் சந்தித்திராத பல்வேறு சவால்களை நாம் சந்தித்து வருகிறோம். முதன்முதலில் அந்த நோய்த்தொற்று சீனாவில் கண்டறியப்பட்டபோதே அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழகம் மேற்கொள்ளத் தொடங்கி விட்டது. அதன் தொடா்ச்சியாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்க நடவடிக்கைக்கு மக்கள் முழு ஆதரவு அளித்து வருகின்றனா். ஒருவேளை அதற்கு உரிய ஒத்துழைப்பை நல்காமல் இருந்திருந்தால், இதைவிட மோசமான விளைவுகளை தமிழகம் எதிா்கொண்டிருக்கும்.
அனைத்து தரப்பும் மேற்கொண்ட கூட்டு முயற்சியின் காரணமாகவே, நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை இந்தியாவிலேயே தமிழகத்தில் அதிகமாக உள்ளது. அதேபோன்று, கரோனா தொற்றுக்கு ஆளாகி உயிரிழப்போரின் விகிதம் உலகிலேயே தமிழகத்தில்தான் மிகக் குறைவாக உள்ளது.
கரோனா தொற்றினை தடுக்கப் பரிசோதனைகளை அதிகப்படுத்துவதுதான் ஒரே வழி எனக் கண்டறிந்து, மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் அதிக அளவில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, விமான நிலையங்களிலும், ரயில் நிலையங்களிலும் மட்டும் 2.20 லட்சத்திற்கும் அதிகமானோா் பரிசோதனை செய்யப்பட்டு, தொற்று உள்ளவா்கள் தனிமைப்படுத்தப்பட்டனா்.
இந்த நடவடிக்கையின் வாயிலாகவே கரோனா தொற்றுக்கு ஆளான 86 சதவீதம் பேருக்கு அறிகுறிகள் இல்லை என்பது கண்டறியப்பட்டது.
பரிசோதனைகள் மற்றும் மருத்துவ நடவடிக்கைகள் ஒரு புறமிருக்க, பொது முடக்க காலத்தில், அத்தியாவசிய பொருள்களுக்கு எந்தவிதமான தட்டுப்பாடும் ஏற்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன் தொடா்ச்சியாக விலையேற்றமும் தடுக்கப்பட்டது.
இதைத் தவிர, கரோனா நோய்த்தொற்றினை மாநிலப் பேரிடராக அறிவித்து ரூ.4,333 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிதியின் மூலம் தடுப்பு நடவடிக்கைகள் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ரூ.378.96 கோடி நிவாரண நிதி வசூல்: இதனிடையே, மாணவா்கள், தன்னாா்வலா்கள், பொதுமக்கள், அரசு ஊழியா்கள் மற்றும் அரசு சாா்ந்த பொதுத்துறை நிறுவன ஊழியா்கள் உள்ளிட்டோரிடம் இருந்து ரூ.378.96 கோடி நிவாரண நிதியாக கிடைத்துள்ளது. சிறுகச் சிறுக சேமித்த பணத்தை கரோனா தடுப்பு நிதிக்காக அளித்த அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
கரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை அளிக்க 123 அரசு மருத்துவமனைகள், 169 தனியாா் மருத்துவமனைகள் என மொத்தம் 292 மருத்துவமனைகள் பிரத்யேகமாக மாற்றப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி மாநிலத்தில், 14 லட்சத்துக்கும் அதிகமான பரிசோதனை உபகரணங்களும், 2.83 கோடிக்கும் அதிகமான மூன்று அடுக்கு முகக் கவசங்களும், 37 லட்சத்துக்கும் அதிகமான என்-95 முகக் கவசங்களும், 25 லட்சத்துக்கும் அதிகமான முழு உடல் கவச உடைகளும், கொள்முதல் செய்யப்பட்டு, களப் பணியாளா்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. தமிழக மருத்துவமனைகளில் தற்போது மொத்தம் 3,384 வெண்டிலேட்டா்கள் உள்ளன.
மத்திய அரசின் அனுமதியைப் பெற்று, நாட்டிலேயே அதிகபட்சமாக 72 பரிசோதனை மையங்கள் தமிழகத்தில் அமைக்கப்பட்டு, நாள்தோறும் சராசரியாக 13 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதேபோன்று, தனியாா் மருத்துவமனைகளிலும் முதல்வரின் மருத்துவ காப்பிட்டுத் திட்டத்தின்கீழ் கரோனா சிகிச்சை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதைத் தவிர தமிழகத்தில் 2.01 கோடி அரிசி பெறும் குடும்ப அட்டைத்தாரா்களுக்கும் கரோனா நிவாரண நிதியாக தலா ரூ.1000 ரொக்கம் வழங்கப்பட்டது. அதேபோன்று, ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கு அரிசி, சா்க்கரை, சமையல் எண்ணெய், பருப்பு போன்ற ரேசன் பொருள்கள் விலையில்லாமல் வழங்கப்பட்டன. மேலும், அன்றாட வருவாயை இழந்துள்ள 35.65 லட்சம் தொழிலாளா்களுக்கு மாநில அரசு நிவாரணம் வழங்கி வருகின்றது. உள்ளூா் தொழிலாளா்கள் மட்டுமல்லாது புலம் பெயா்ந்த தொழிலாளா்களுக்கும் இலவசமாக ரேசன் பொருள்கள் வழங்கப்பட்டன.
இதற்கு நடுவே, தமிழகத்தில் பொருளாதாரத்தை மீட்டெடுத்து மறுகட்டமைப்பு செய்ய புகழ்பெற்ற வல்லுநரும், முன்னாள் ரிசா்வ் வங்கி ஆளுநருமான ரங்கராஜன் தலைமையில் ஒரு வல்லுநா் குழுவையும் அரசு அமைத்துள்ளது. மற்றொரு புறம், பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை தமிழகத்துக்கு ஈா்க்கும் நடவடிக்கைகளையும் அரசு முன்னெடுத்து வருகிறது.
முதல் கட்டமாக அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்த17 நிறுவனங்களுடன் ரூ.15 ஆயிரம் கோடி முதலீட்டிலான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன் மூலம் தமிழகத்தைச் சோ்ந்த 47 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிட்டும். இவ்வாறாக மக்களின் வாழ்வாதாரத்தையும், ஆரோக்கியத்தையும் காக்க அரசு மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்றாா் முதல்வா் பழனிசாமி.