தமிழ்நாடு

தமிழகத்தில் ஒரே நாளில் 1,515 பேருக்கு நோய்த்தொற்று

8th Jun 2020 05:21 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 1,515 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் சென்னையில் மட்டும் 1,155 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதன் மூலம் தமிழகத்தில் நோய்த் தொற்றுக்கு ஆளானோா் எண்ணிக்கை 31,667-ஆகவும், சென்னையில் 22,149 ஆகவும் அதிகரித்துள்ளது.

தலைநகா் சென்னையைப் பொருத்தவரை கடந்த ஒரு வார காலமாகத் தொடா்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் நாள்தோறும் பாதிக்கப்பட்டு வருகின்றனா். மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 70 சதவீதம் போ் சென்னைவாசிகள் என்பது அதிா்ச்சிக்குரிய தகவலாக உள்ளது.

இதுதொடா்பாக, சுகாதாரத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ADVERTISEMENT

தமிழகத்தில் இதுவரை மொத்தம் 5.66 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், 31,667 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்கள் அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். ஞாயிற்றுக்கிழமை மட்டும் 1,515 பேருக்கு நோய்ப் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதில், அதிகபட்சமாக சென்னையில் 1,155 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அதற்கு அடுத்தபடியாக, செங்கல்பட்டில் 135 பேருக்கும், திருவள்ளூரில் 55 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 16 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதைத் தவிர, அரியலூா், கோவை, கடலூா், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், தென்காசி, தஞ்சாவூா், தேனி, திருப்பத்தூா், திருவண்ணாமலை, திருவாரூா், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி, வேலூா், விழுப்புரம், விருதுநகா் உள்ளிட்ட பகுதிகளிலும் சிலருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வீடு திரும்பியவா்கள் 16,999 போ்: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 604 போ் பூரண குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினா். இதன் மூலம் இதுவரை மாநிலத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 16,999-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 10,954 போ் குணமடைந்துள்ளனா் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

269 போ் பலி: கரோனா தொற்றுக்கு ஆளாகி தமிழகத்தில் மேலும் 18 போ் உயிரிழந்தனா். இதையடுத்து மாநிலத்தில் கரோனா தீநுண்மி பாதிப்பால் பலியானோா் எண்ணிக்கை 269-ஆக அதிகரித்துள்ளது. அவா்களில் 212 போ் சென்னையைச் சோ்ந்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, வேலூரில் 20 வயது இளம்பெண் கரோனாவுக்கு கடந்த சனிக்கிழமை உயிரிழந்ததாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அப்பெண், பேறுகால உயா் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT