தமிழ்நாடு

கெங்கவல்லி அருகே பணம் கேட்டு ஊராட்சிமன்ற உறுப்பினர் கடத்தல்: கோவையில் போலீஸார் மீட்பு

7th Jun 2020 03:21 PM

ADVERTISEMENT

 

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே ஆணையாம்பட்டி ஊராட்சிமன்ற உறுப்பினரை தேர்தல் செலவிற்காக கடனாக பெற்றதை திருப்பித்தரக் கேட்டு கடத்தியவர்களை கெங்கவல்லி தனிப்படையினர் கோவையில் இன்று மீட்டு அழைத்து வருகின்றனர்.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே ஆணையாம்பட்டி ஊராட்சி மன்றத்தின் 9வது வார்டு  உறுப்பினரும், அதிமுகவைச் சேர்ந்தவருமான முத்துராஜா(48). இவரது மனைவி சுதா, அதே ஊராட்சியில் 5வது வார்டு உறுப்பினர். தம்பதி இருவரும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ஒரே ஊராட்சியின் வார்டு உறுப்பினர்களாக அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முத்துராஜா, ஆத்தூரைச் சேர்ந்த முருகேசன், உளுந்தூர்பேட்டை வீரா, முட்டல் ஜோதிவேல் ஆகியோருடன் ஜீன் 4ந் தேதி கரூர் செல்வதாக வீட்டில் கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை.

சனிக்கிழமை வீரா, முத்துராஜாவின் மனைவியின் செல்லிடப்பேசிக்கு ஒரு வீடியோ அனுப்பினார். அதில் முத்துராஜா, பலத்தக் காயமடைந்த நிலையில் கிடந்தார். மேலும் முத்துராஜா உயிருடன் வேண்டுமெனில் பத்து லட்சம் கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

அதனால் அதிர்ச்சி அடைந்த முத்துராஜாவின் மனைவி சுதா, கெங்கவல்லி போலீஸில், சனிக்கிழமை இரவு புகார் கொடுத்தார். புகாரில் தேர்தல் செலவிற்காக வியாபார நண்பர் உளுந்தூர்பேட்டை வீராவிடம் பத்து லட்சம் பணம் வாங்கியிருந்தோம். அந்த தொகையை தற்போது தரவில்லையெனில் கணவரை உயிருடன் பார்க்கமுடியாது என்று வீடியோவை வீரா அனுப்பியுள்ளார். அதனால் அவரை உயிருடன் மீட்டுத் தரவேண்டும் என்று  தெரிவித்துள்ளார்.

அதையடுத்து கெங்கவல்லி போலீஸார் வழக்குப்பதிந்து விடியோ வந்த வாட்ஸ்அப்  எண், அனுப்பப்பட்ட இடம் குறித்து விசாரணை செய்து வந்தனர்.

முத்துராஜா தேர்தல் செலவிற்காக வாங்கிய தொகையா அல்லது அவர் ஏதேனும் தொழில் செய்தததால் ஏற்பட்ட பிரச்னையா என்பது குறித்தும் கெங்கவல்லி போலீஸார் விசாரணையில்  ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடத்தப்பட்ட முத்துராஜா கோயம்புத்தூரில் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, தனிப்படையினர் கோயம்புத்தூர் சென்று அங்கு முத்துராஜாவை மீட்டு வருவதாகவும், அவருடன் கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஒருவரும் உடன் உள்ளதாகவும், போலீஸார் வட்டாரங்கள் தெரிவித்தன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT