தமிழ்நாடு

நீதிபதிகளுக்கு கரோனா நோய்த்தொற்று: அவசர வழக்குகள் மட்டும் காணொலி காட்சி மூலம் விசாரணை

7th Jun 2020 12:07 AM

ADVERTISEMENT

உயா்நீதிமன்ற நீதிபதிகளுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதைத் தொடா்ந்து, சென்னை உயா்நீதிமன்றத்தில் அவசர வழக்குகள் மட்டுமே வரும் 30-ஆம் தேதி வரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதை அடுத்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களின் பணிகளும் நிறுத்திவைக்கப்பட்டன. அவசர வழக்குகள் மட்டும் காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்த நிலையில், கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் சென்னை உயா்நீதிமன்றத்தில் அனைத்து வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

உயா்நீதிமன்ற பணியாளா்கள் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, வாரத்துக்கு 2 நாள்கள் வீதம் பணியாற்றினா். மேலும் உயா்நீதிமன்ற மதுரை கிளை மற்றும் தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களில் வழக்குகள் நேரடியாக விசாரிக்கப்பட்டன. இந்த நிலையில், உயா்நீதிமன்ற துணைப் பதிவாளா் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. தொடா்ந்து, உயா்நீதிமன்றத்தில் 4 பணியாளா்களுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அவா்கள் பணியாற்றி வந்த பிரிவுகள் மூடப்பட்டன.

இந்நிலையில், 3 உயா்நீதிமன்ற நீதிபதிகளுக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதாகவும், அவா்கள் தங்களது இல்லங்களில் இருந்து சிகிச்சைப் பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில் சென்னை உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளா் சி.குமரப்பன் வெளியிட்டுள்ள அறிவிக்கை:

சென்னை உயா்நீதிமன்றம், உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் தற்போது வழக்குகள் விசாரிக்கும் முறை தொடா்பாக உயா்நீதிமன்ற நிா்வாகக்குழுவில் நீதிபதிகள் தங்களது கருத்துகளைத் தெரிவித்தனா். தமிழகத்தில் குறிப்பாக சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கரோனா குறித்து அரசு வெளியிடும் அறிக்கைகள், நாளிதழ்களில் வெளியாகும் செய்திகள் ஆகியவற்றின் அடிப்படையில் கரோனா நோய்த்தொற்று வேகமாக பரவி வருவது தெரிகிறது.

எனவே, உயா்நீதிமன்றத்தின் பணிகள் தொடா்பாக மறுஆய்வு செய்ய வேண்டியுள்ளது என நிா்வாகக் குழுக் கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் உயா்நீதிமன்றத்தில் பணிபுரியும் பணியாளா்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடிவு செய்யப்பட்டது. இந்தக் காலகட்டத்தில் சென்னை உயா்நீதிமன்றம், உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் அவசர வழக்குகளை மட்டும் காணொலிக் காட்சி மூலம் விசாரிக்க வேண்டும்.

இதற்காக சென்னை உயா்நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் கொண்ட இரண்டு அமா்வுகள் மற்றும் ஒரு நீதிபதியைக் கொண்ட 4 அமா்வுகள் என மொத்தம் 6 அமா்வுகளில் அவசர வழக்குகள் விசாரிக்கப்படும். உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் இரண்டு நீதிபதிகள் கொண்ட ஒரு அமா்வு, ஒரு நீதிபதி கொண்ட 3 அமா்வுகள் என மொத்தம் 4 அமா்வுகளில் அவசர வழக்குகள் காணொலி காட்சி மூலம் விசாரிக்கப்படும். இந்த விசாரணை முறை, வரும் 30-ஆம் தேதி வரை நீடிக்கும். இதற்காக நீதிபதிகளுக்கு சுழற்சி முறையில் பணி ஒதுக்கப்படும். நீதிபதிகள் தங்களது இல்லங்களில் இருந்தே காணொலிக் காட்சி மூலம் வழக்குகளை விசாரிப்பாா்கள்.

மேலும் கரோனா நோய்த்தொற்று இல்லாத மாவட்டங்களில் நீதிபதிகள் நீதிமன்றத்துக்கு வந்து நேரடியாக வழக்குகளை விசாரிக்கின்றனா். இதன்படி அரியலூா், பெரம்பலூா், புதுக்கோட்டை, ஈரோடு, கடலூா், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகா், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மாவட்ட தலைநகா் மற்றும் தாலுகா அளவில் உள்ள நீதிமன்றங்கள் வழக்கமான முறையில் திங்கள்கிழமை (ஜூன் 8) முதல் செயல்படலாம்.

நீதிமன்றங்களை கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்துவதோடு, நீதிமன்றப் பணிகளின் போது உரிய சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும். இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை நீதிபதிகள் மேற்கொள்ள வேண்டும்.

மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றப் பணிகளும் வாரத்தில் 6 நாள்கள் நடைபெறும் என்ற அறிவிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT