தமிழ்நாடு

பிளாஸ்டிக் குடம் தயாரிக்கும் சிறு தொழில் விற்பனையில்லாமல் நஷ்டம்: நிவாரணம் வழங்க அரசுக்கு கோரிக்கை

4th Jun 2020 04:20 PM

ADVERTISEMENT

 

சீர்காழியில் ஊரடங்கால் பிளாஸ்டிக் குடம் தயாரிக்கும் சிறு தொழில் விற்பனை இல்லாமல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால், வியாபாரிகள் நிவாரணம் வழங்கக் கோரி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

கரோனா பொது முடக்கம் தளர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் நாகை மாவட்டம் சீர்காழியில் உள்ள பிளாஸ்டிக் குடம் தயாரிக்கும் சிறு தொழிற்சாலையில் குடம் தயாரித்தும் போதிய விற்பனை இல்லாமல் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. 

ADVERTISEMENT

போக்குவரத்து முழுமையாக இல்லாததால் மூலப்பொருள்கள் விலை இரு மடங்காக விலை உயர்ந்துள்ளது. குடங்கள் தயாரிக்க வேலையாட்கள் முழுமையாக வராமல் குறைந்த ஆட்களைக் கொண்டு குடங்களைத் தயார் செய்தாலும், அதை வாங்கி செல்ல வியாபாரிகள் யாரும் வராததால் குடம் தயாரிக்கும் தொழில் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. மேலும் வங்கிகளில் கடன்களைப் பெற்று தொழில் செய்து வருவதால் தற்போது வங்கிகளும் கடனை கட்ட சொல்லி நெருக்கடி தந்து வருகின்றன.

இந்த கரோனாவால் சிறு தொழில் செய்யும் தொழிலாளர்கள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளனர். குடங்களை வாங்கி சென்று விற்பனை செய்யக்கூடிய சிறு விற்பனையாளர்களும் ஊரடங்கால் அனைத்து பகுதிகளுக்கும் செல்ல முடியாமல் ஒரு சில பகுதிகளுக்குச் சென்று வருவதாலும், அப்பகுதி மக்கள் கையில் பணம் இல்லாமல் குடங்களை வாங்காமல் இருக்கின்றனர். 

இதனால், நாள்தோறும் அலைந்தும் குடங்கள் விற்பனையாகாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வருவதாகவும், இதனால் குடும்பத்தை நடத்துவது சிரமமாக உள்ளதாகச் சிறு விற்பனை செய்யும் வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர். சிறு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் தமிழக அரசு தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT