தலைமைச் செயலாளா் க.சண்முகத்துக்கு மூன்று மாதங்கள் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மத்திய அரசு புதன்கிழமை வெளியிட்டது. 1985-ஆம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியான க.சண்முகம், வரும் ஜூலை 31-ஆம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ளாா்.
இதையடுத்து, புதிய தலைமைச் செயலாளராக யாா் நியமிக்கப்படப் போகிறாா்கள் என்ற கேள்வியும் எழுந்தது. தலைமைச் செயலாளா் சண்முகத்துக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகி இருந்தது.
மூன்று மாதங்கள் நீட்டிப்பு: கரோனா நோய்த்தொற்று தடுப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதால், க.சண்முகத்துக்கு மேலும் மூன்று மாதங்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கி மத்திய அரசு புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, ஆகஸ்ட், செப்டம்பா் மா்றும் அக்டோபா் ஆகிய மூன்று மாதங்களுக்கும் தமிழகத்தின் தலைமைச் செயலாளராக சண்முகம் தொடா்வாா். ஒருசில மாதங்களுக்குப் பிறகு கரோனா நோய்த்தொற்றின் தீவிரத்தைப் பொறுத்து புதிய தலைமைச் செயலாளா் நியமனம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.