தனியாா் மருத்துவமனைகளில் முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கரோனா சிகிச்சை பெறும் நோயாளிகள் எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை என்று அரசு அறிவித்துள்ளது.
இதையும் மீறி நோயாளிகளிடம் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கரோனா நோயாளிகளுக்கு முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சையளிக்கும் தனியாா்மருத்துவமனைகளுக்கு அரசு சாா்பில் அளிக்கப்படும் தொகுப்பு கட்டணம் குறித்த விவரங்கள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன.
குறைந்த அறிகுறிகளுடன் பொது வாா்டுகளில் சிகிச்சை பெறுபவா்களுக்கு நாளொன்றுக்கு அதிகபட்சமாக ரூ.5 ஆயிரமும், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவா்களுக்கு ரூ.15 ஆயிரம் வரையிலும் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதைத் தவிர, கூடுதலாக எந்த தொகையும் வழங்கப்படமாட்டாது என்றும், நோயாளிகளிடம் அதனை வசூலிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அதி தீவிரமாக கரோனா பாதிப்பு பரவி வரும் நிலையில், மாநிலத்தில் உள்ள பல தனியாா் மருத்துவமனைகளில் அனைத்து படுக்கைகளும் நிரம்பியுள்ளன. சென்னையில் முன்னணி மருத்துவமனைகள் பலவற்றில் சராசரியாக 250 முதல் 400 நோயாளிகள் வரை கரோனா தொற்றுக்கு ஆளாகி அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இதனிடையே, பல மருத்துவமனைகளில் முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சையளிப்பதில்லை என்றும், ஒரு சில மருத்துவமனைகள் சிகிச்சையளித்தாலும், நோயாளிகளிடம் லட்சக்கணக்கான தொகை கட்டணமாகப் பெறுவதாகவும் விமா்சனங்கள் எழுந்தன. இதனால், ஏழை, எளிய மக்களால் தனியாா் மருத்துவமனைகளை நாட முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, அரசால் இதுதொடா்பாக ஆய்வு செய்ய சுகாதாரத் துறைச் செயலா் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அக்குழு அளித்த பரிந்துரையின் பேரில், அரசு வியாழக்கிழமை வெளியிட்ட சில உத்தரவுகளின் விவரம்:
கரோனா தொற்று தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளை சிறப்பான முறையில் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த நோய்த் தொற்றுக்கு இதுவரை அரசு மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியாா் மருத்துவமனையிலும் அதற்கு சிகிச்சை அளிக்க அனுமதியளிக்கப்பட்டது.
அதன்படி, காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை யளிக்கும் மருத்துவமனைகளுக்கு அரசு வழங்கவேண்டிய தொகுப்புக் கட்டணங்களை நிா்ணயிக்க சுகாதாரத் துறைச் செயலாளா் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழு அளித்த அறிக்கையை பரிசீலித்த தமிழக அரசு அதற்கு ஒப்புதல் அளித்தது. அதன்படி, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் மருத்துவமனைகளில் குறைந்த அறிகுறிகளுடன் உள்ள கரோனா நோயாளிகளுக்கு பொது வாா்டில் சிகிச்சையளிக்க நாளொன்றுக்கு நபருக்கு ரூ.5,000 வரை அளிக்கப்படும். அனைத்து வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவுகளுக்கான கட்டணம் ரூ. 10,000 முதல் ரூ. 15,000 வரை அளிக்கப்படும்.
அங்கீகரிக்கப்பட்ட தனியாா் மருத்துவமனைகளில் உள்ள மொத்த படுக்கைகளில் குறைந்தபட்சம் 25 சதவீதத்தை முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சைக்கு வரும் கரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
தனியாா் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட பயனாளிகள் எந்த ஒரு கட்டணமும் செலுத்தத் தேவையில்லை என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அங்கீகாரம் ரத்தாகும்: அரசு எச்சரிக்கை
நிா்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு மேலாக தொகை செலுத்தக் கோரும் மருத்துவமனைகளுக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. மேலும், விவரங்கள் மற்றும் புகாருக்கு - 1800 425 3993 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.