சென்னையில் ஜூலை 15-ஆம் தேதிக்குள் 1.5 லட்சம் பேர் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்படலாம் என எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் ஒரு நாளில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த 5 நாள்களாக ஆயிரத்தைத் தாண்டி வருகிறது. குறிப்பாக சென்னையில் மட்டும் ஒரேநாளில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த 2 நாள்களாக ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
இந்த நிலையில், ஜூலை 15-ஆம் தேதிக்குள் சென்னையில் மட்டும் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1.5 லட்சம் ஆகலாம் என எம்ஜிஆர் பல்கலைக்கழகம் ஆய்வில் தெரியவந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அக்டோபர் மாதத்தில் கரோனா பாதிப்பு மேலும் தீவிரமாக இருக்கலாம் என்று கணித்துள்ள எம்ஜிஆர் பல்கலைக்கழகம், ஜூன் இறுதியில் கரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை தமிழகத்தில் 1.32 லட்சமாகும் என்று கணித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.