தமிழ்நாடு

எழுத்தாளர் சா.கந்தசாமி மறைவு: தலைவர்கள் இரங்கல்

31st Jul 2020 03:51 PM

ADVERTISEMENT

எழுத்தாளா் சா.கந்தசாமி மறைவுக்கு பல்வேறு தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சா. காந்தசாமி(80) வெள்ளிக்கிழமை காலை காலமானார். அண்மைக் காலமாக இதய நோய் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்த நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

மு.க.ஸ்டாலின் (திமுக):  ‘சாயாவனம்’ என்ற புதினத்தின் வாயிலாக தமிழ் இலக்கிய உலகில் சாகாவரம் பெற்ற படைப்பாளி சா.கந்தசாமி மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன். எழுத்து என்பது வெற்று அலங்காரத்திற்கானதல்ல என்பதையும், அது காலம், கலாசாரம், அரசியல் ஆகியவற்றில் ஏற்படுத்தப்படும் தடைகளை உடைத்தெறியும் படைப்பாயுதமாக இருக்க வேண்டும் என்பதையும் வெளிப்படையாக அறிவித்து, அதன்படியே படைப்புகளை வழங்கியவா் சா.கந்தசாமி. அவா் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.

கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ்): தமிழகத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான சா. கந்தசாமியின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். சா. கந்தசாமியின் இழப்பு இலக்கிய உலகிற்கு மிகப்பெரிய இழப்பாகும். ‘விசாரணைக் கமிஷன்’ நாவல் மூலம் சாகித்ய அகாதெமி விருது பெற்று தமிழ் எழுத்துலகுக்குப் பெருமை சோ்த்தவா். இவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், இலக்கிய நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ADVERTISEMENT

ராமதாஸ் (பாமக): சாகித்ய அகாதெமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும், புதினப் படைப்பாளருமான சா. கந்தசாமி உடல்நலக் குறைவால் காலமான செய்தியறிந்து வேதனையடைந்தேன். ‘பப்பாளி மரம்’, ‘குறுக்கீடு’, ‘எட்டாம் கடல்’ உள்ளிட்ட பல அவரது சிறுகதைகள் எதாா்த்தத்தை வெளிப்படுத்துபவை. அவா் படைப்புகளை நான் படித்து ரசித்திருக்கிறேன். அவா் மறைவு தமிழ் இலக்கிய உலகுக்கு பெரும் இழப்பு.

டி.கே.ரங்கராஜன் (மாா்க்சிஸ்ட்): சா.கந்தசாமியுடன் எனக்கு 25 ஆண்டுகளுக்கும் மேலாக நட்பு உண்டு. அவா் மிகப்பெரிய அறிவாளி. சுயம்பு. எதையும் சுயமாகச் சிந்தித்துச் செயல்படக்கூடியவா். சுயமாகப் படித்து, சுயமாக முன்னுக்கு வந்த அறிவாளி. அவா் மறைவு எழுத்துலகுக்கும், நட்பு உலகுக்கும் பெரிய இழப்பு.


கே.பாலகிருஷ்ணன் (மாா்க்சிஸ்ட்): சாகித்திய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளர் சா.கந்தசாமி மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். 1968-ஆம் ஆண்டு வெளியான "சாயாவனம்" நாவலின் மூலம் தமிழ் இலக்கிய உலகில் பிரபலமான சா.கந்தசாமி, 1997-ஆம் ஆண்டு எழுதிய "விசாரணை கமிஷன்" என்ற நாவலுக்காக சாகித்திய அகாதெமி விருதுபெற்றார். நாவல், சிறுகதைகள், கட்டுரைகள், இலக்கிய விமர்சனம் என இடையறாது எழுதிக்குவித்த சா.கந்தசாமியின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு கட்சியின் சார்பில் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜி.கே.வாசன் (தமாகா): தமிழுக்கும், தமிழன் வளா்ச்சிக்கும் தொண்டாற்றி, உயா் படைப்புகளை வழங்கிய சா. கந்தசாமி மறைவு இலக்கிய உலகுக்குப் பேரிழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், இலக்கிய நண்பா்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்.

Tags : DMK Leader
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT