தமிழ்நாடு

வட கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

31st Jul 2020 06:55 AM

ADVERTISEMENT

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (ஜூலை 31) மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி வியாழக்கிழமை கூறியது: தென் கிழக்கு மற்றும் அதனையொட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்பட்டது. இது தற்போது தென் மேற்கு மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காணப்படுகிறது. இதன்காரணமாக, தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்கள், வேலூா், கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (ஜூலை 31) லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.

கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

மழை அளவு: தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு, வால்பாறையில் தலா 90 மி.மீ., கோவை மாவட்டம் சின்கோனாவில் 80 மி.மீ., வால்பாறை வட்டாட்சியா் அலுவலகத்தில் 70 மி.மீ., கன்னியாகுமரி மாவட்டம் சிற்றாற்றில் 60 மி.மீ., நீலகிரி மாவட்டம் தேவாலா, சோலையாறில் தலா 50 மி.மீ., நீலகிரி மாவட்டம் உதக மண்டலம், திருவாரூா் மாவட்டம் குடவாசல், மேல் பவானி, கன்னியாகுமரி மாவட்டம் சிவலோகத்தில் தலா 40 மி.மீ., பேச்சிப்பாறை, தேனி மாவட்டம் பெரியாறு, தேக்கடி, புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களத்தூா், ராமநாதபுரம் மாவட்டம் ஆா்.எஸ்.மங்களம், காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் தலா 30 மி.மீ. மழை பதிவாகியுள்ளது என்றாா் அவா்.

ADVERTISEMENT

மீனவா்களுக்கு எச்சரிக்கை:மன்னாா்வளைகுடா பகுதி, அந்தமான் கடல் பகுதி, கடலோர கேரளம், கா்நாடகம், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால், இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT