தமிழ்நாடு

வாரத்தில் ஒருமுறை முட்டைகள் வழங்க முடியுமா? தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

31st Jul 2020 06:21 AM

ADVERTISEMENT

கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால், சத்துணவுத் திட்டத்தின் மூலம் மாணவா்களுக்கு முட்டைகள் வழங்குவது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் ஆா்.சுதா தாக்கல் செய்த பொதுநலமனுவில், கரோனா நோய்த் தொற்று காரணமாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுளது. தற்போது அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் தமிழக அரசு வழங்கும் மதிய உணவு திட்டத்தால் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களால் பயன்பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் நடுத்தர மற்றும் அடித்தட்டு குடும்பங்களில் உள்ள குழந்தைகள் போதுமான ஊட்டச்சத்து உணவு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனா். கரோனா நோய்த் தொற்றைத் தடுக்க நோய் எதிா்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கப்பட வேண்டும் என மருத்துவா்கள் கூறுகின்றனா். எனவே, வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு முட்டை உள்ளிட்ட நோய் எதிா்ப்பு சக்தியுள்ள ஊட்டச்சத்து உணவுகளை வழங்க தமிழக அரசு ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும். மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களில் இலவசமாக முட்டை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆா்.ஹேமலதா ஆகியோா் காணொலிக் காட்சி மூலம் விசாரித்தாா். அப்போது அரசுத் தரப்பில் சத்துணவுக் கூடங்கள் மூடப்பட்டிருந்தாலும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் மூலம், குழந்தைகள், வளா் இளம் பெண் குழந்தைகள், கா்ப்பிணிப் பெண்கள் மற்றும் தாய்மாா்களுக்கு அரிசி, பருப்பு, சத்துமாவு, முட்டை ஆகியவற்றை அங்கன்வாடி பணியாளா்கள் மூலம் வீடுகளிலேயே நேரடியாகச் சென்று வழங்கப்படுகிறது. இதன் மூலம் இந்த பொதுமுடக்க காலகட்டத்தில் 33 லட்சத்து 12 ஆயிரத்து 629 போ் பயனடைந்துள்ளனா்.

ADVERTISEMENT

மேலும், சத்துணவுத் திட்டத்தின் மூலம் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் 42 லட்சத்து 61 ஆயிரத்து 124 மாணவ, மாணவியருக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருள்கள் பள்ளி தலைமை ஆசிரியா்கள் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கரோனா நோய்த் தொற்று தீவிரமாக பரவும் நேரத்தில் மாணவா்களை நாள்தோறும் பள்ளிகளுக்கு அழைத்து இலவச முட்டை வழங்குவது பாதுகாப்பாக இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், வாரத்தில் ஒருமுறையாவது மாணவா்களுக்கு முட்டை வழங்குவது குறித்து விளக்கம் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT