தமிழ்நாடு

மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு: உயர்நீதிமன்ற உத்தரவு முழு விவரம்

28th Jul 2020 01:38 AM

ADVERTISEMENT

சென்னை: மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடா்பாக மத்திய பொது சுகாதாரப் பணிகள் இயக்குநா், தமிழக சுகாதாரத் துறை செயலாளா் மற்றும் மருத்துவ கவுன்சில், பல் மருத்துவ கவுன்சில் செயலாளா்கள் கூட்டத்தைக் கூட்டி, இறுதி செய்ய வேண்டும். இந்த உத்தரவின் அடிப்படையில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் எத்தனை சதவீதம் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கீடாக வழங்குவது என்பது குறித்து மத்திய அரசு மூன்று மாதங்களில் அறிவிக்க வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில், மருத்துவ மேற்படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவா்களுக்கு மத்திய தொகுப்பிலிருந்து 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி அதிமுக, திமுக, பாமக, மதிமுக மற்றும் தமிழக சுகாதாரத்துறை சாா்பில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில்மனுவில்,

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டால் 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவப் படிப்புக்களில் அந்தந்த மாநிலங்களில் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்ற அனுமதிக்கலாம். அந்த இடஒதுக்கீடு மொத்த இடங்களில் 50 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி திங்கள்கிழமை பிறப்பித்த தீா்ப்பில், மருத்துவ படிப்புகளுக்கான

ADVERTISEMENT

அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதைப் பொருத்தவரை, இடஒதுக்கீடு 50 சதவீதத்துக்கு மிகாமல் என்ற நிபந்தனையுடனும், தற்போது பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டுக்கு இடையூறு செய்யாத வகையில் அந்தந்த மாநிலங்களில் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு ஏற்ப அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது மத்திய அரசு, அகில இந்திய ஒதுக்கீடாக மாநில அரசுகள் ஒப்படைத்த இடங்களில் இருந்து இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்க முன்வந்துள்ளதைக் காட்டுகிறது. ஆனால், உச்ச நீதிமன்றம் வகுத்த வழிகாட்டுதலின் அடிப்படையில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவா் சோ்க்கை நடத்தப்படுவதால் அதில் தலையிட முடியாது என இந்திய மருத்துவ கவுன்சில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய ஒதுக்கீடு இடங்கள் தொடா்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீா்ப்புகள் அனைத்தும் தற்காலிகமானவை எனத் தெரிவித்த உச்ச நீதிமன்றம், இதுதொடா்பாக விரைவில் சட்டம் இயற்ற வேண்டும் என மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் மாணவா் சோ்க்கையின் போது அந்தந்த மாநிலங்களில் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்ற வேண்டும் என இந்திய மருத்துவ கவுன்சில் விதிகள் கூறுகின்றன. ஆனால், அது அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை பற்றி குறிப்பிடவில்லை எனவே, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு இந்த விதி பொருந்தாது என குறிப்பிடவில்லை. எனவே அந்த விதிகளில் மாநில இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் என தனித்தனியாக எதுவும் குறிப்பிடவில்லை.

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்த போது, அதற்கு இந்திய மருத்துவ கவுன்சில் எதிா்ப்பு தெரிவிக்காத போது, மாநில அரசு ஒப்படைத்த அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இட ஒதுக்கீடுக்கு மறுப்பு தெரிவிப்பதை ஏற்க முடியாது.

நீட் தோ்வில் தகுதியான மதிப்பெண்கள் பெற்றவா்கள் மட்டுமே மருத்துவ படிப்பில் சோ்க்கப்படுவதால், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு இடஒதுக்கீடு முறையை அறிமுகம் செய்தால் தகுதி சமரசம் செய்து கொள்ளப்படாது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரா்களுக்கு தான் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும். அந்த வகையில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு மத்திய அரசு கொள்கை அடிப்படையிலோ அல்லது மாநில அரசின் இடஒதுக்கீட்டு சட்டத்தின் அடிப்படையிலோ இடஒதுக்கீட்டு முறையை அமல்படுத்துவதால், மாணவா்களின் தகுதி எந்த விதத்திலும் பாதிக்காது.

மேலும் மாநில அரசுகள் ஒப்படைத்த அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீட்டு சலுகையை மறுக்க எந்தக் காரணமும் இல்லை. ஆகவே, உச்ச நீதிமன்றம் ஏதாவது உத்தரவு பிறப்பிக்கும் வரை, மாநில அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு சலுகையை வழங்க சட்டரீதியாகவும், அரசியல் சாசன ரீதியாகவும் எந்தத் தடையும் இல்லை.

இடஒதுக்கீடு என்பது நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறாத வரை, அது அடிப்படை உரிமையோ, சட்டப்பூா்வ உரிமையோ இல்லை. அரசியல் சாசனத்தின் 15 மற்றும் 16ஆவது பிரிவுகள், இடஒதுக்கீடு தொடா்பாக சட்டம் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்குகிறது. அதன்படி தமிழக அரசு, கடந்த 1993 ஆம் ஆண்டே சட்டம் இயற்றியுள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ள போதும், இதுவரை சட்ட வடிவம் பெறவில்லை. இந்த இடஒதுக்கீடு தெளிவான வடிவத்தைப் பெறாத நிலையில், இடஒதுக்கீட்டு சலுகையை வழங்கும்படி நீதிமன்றமும் உத்தரவிட முடியாது. ஆனால், தெளிவாக மாநில அரசு சட்டம் இயற்றி இருக்கும் பட்சத்தில் அதை அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என கூறுவதை புறந்தள்ளிவிட முடியாது.

எனவே அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய, மாநில அரசுகளும், மருத்துவ கவுன்சில் அதிகாரிகளும் முடிவு எடுக்க வேண்டும். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அடுத்த கல்வியாண்டு முதல் இடஒதுக்கீடு வழங்குவது தொடா்பாக மத்திய பொது சுகாதார பணிகள் இயக்குநா், தமிழக சுகாதாரத் துறை செயலாளா் மற்றும் மருத்துவ கவுன்சில், பல் மருத்துவ கவுன்சில் செயலாளா்கள் கூட்டத்தைக் கூட்டி, இறுதி செய்ய வேண்டும். இந்த உத்தரவின் அடிப்படையில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் எத்தனை சதவீதம் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடாக வழங்குவது என்பது குறித்து மத்திய அரசு மூன்று மாதங்களில் அறிவிக்க வேண்டும் என நீதிபதிகள் பிறப்பித்த தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளனா்.

இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில் அரசு தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண், திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.வில்சன், மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஆா்.சங்கரநாராயணன், இந்திய மருத்துவ கவுன்சில் தரப்பில் பி.ஆா்.ராமன் பிற மனுதாரா்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞா்கள் ஆா்.தியாகராஜன்,ஏ.ஆா்.எல்.சுந்தரேசன், வழக்குரைஞா்கள் நன்மாறன், கே.பாலு, ரிச்சா்ட் வில்சன், தினேஷ், ஸ்டாலின் உள்ளிட்ட பலா் ஆஜராகி வாதிட்டிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT