தமிழ்நாடு

வனத்துறை விசாரணைக்குச் சென்ற விவசாயி பலி: 6ஆவது நாளாக உடலை வாங்க மறுப்பு

28th Jul 2020 11:50 AM

ADVERTISEMENT

தென்காசியில் வனத்துறை விசாரணைக்குச் சென்ற விவசாயி முத்து  பலியான விவகாரத்தில் 6ஆவது நாளாக இன்றும் உடலை வாங்க உறவினர்கள் மறுப்புத் தெரிவித்தனர்.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள வாகைக் குளத்தைச் சேர்ந்த விவசாயி அணைக்கரை முத்து (72). இவர் தனது தோட்டத்தில் அனுமதியின்றி மின்வேலி அமைத்ததையடுத்து வனத்துறையினர் ஜூலை 22 இரவு அணைக்கரை முத்துவை விசாரணைக்காக அழைத்துச் சென்ற நிலையில் திடீர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

இதையடுத்து வனத்துறை தாக்குதலில் உயிரிழந்ததாகக் கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆழ்வார்குறிச்சி காவல்துறையினர் அணைக்கரை முத்து மகன் நடராஜன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து குற்றவியல் நீதிபதி விசாரணைக்குப் பரிந்துரை செய்தனர்.

இதையடுத்து அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் விசாரணையில் ஈடுபட்டார். இந்நிலையில் வனத்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரேதப் பரிசோதனைக்கு முத்துவின் குடும்பத்தினர் ஒத்துக் கொள்ளவில்லை.

ADVERTISEMENT

இந்நிலையில் ஜூலை 23 இரவு பிரேதப் பரிசோதனை நடைபெற்றது. இதையடுத்து உறவினர்கள் உடலை வாங்க மறுப்புத் தெரிவித்தனர். ஜூலை 25 சனிக்கிழமை தமிழக முதல்வர் ரூ.10 லட்சம் நிவாரணம் மற்றும் ஒருவருக்கு வேலை வழங்குவதாகக் கூறியதையும் ஏற்க மறுத்து 6ஆவது உடலை வாங்காமல் உள்ளனர்.

இதனிடையே அணைக்கரை முத்து மனைவி பாலம்மாள் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மறு பிரேதப் பரிசோதனை மற்றும் சிபிசிஐடி விசாரணைக்கு விண்ணப்பித்திருந்தார். அதற்கான விசாரணை இன்று காலை நடைபெற உள்ள நிலையில் வாகைக்குளத்தில் காவல்துணைக் கண்காணிப்பாளர் கோகுலகிருஷ்ணன் தலைமையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : tenkasi
ADVERTISEMENT
ADVERTISEMENT