தமிழ்நாடு

சாத்தான்குளம் சம்பவம்: உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி உத்தரவு- முதல்வர் பழனிசாமி வழங்கினார்

28th Jul 2020 07:09 AM

ADVERTISEMENT


சென்னை:  சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்த இரண்டு பேரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணிக்கான நியமன உத்தரவை முதல்வர் பழனிசாமி திங்கள்கிழமை வழங்கினார்.

தலைமைச் செயலகத்தில் இதற்கான நிகழ்வு நடைபெற்றது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் நடைபெற்ற சம்பவத்தில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் ஏற்கெனவே முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்டது. மேலும், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பின்படி, ஜெயராஜின் மூத்த மகளான பெர்சிஸýக்கு இளநிலை உதவியாளர் பணியிடத்துக்கான நியமன உத்தரவை முதல்வர் பழனிசாமி திங்கள்கிழமை வழங்கினார். இந்த நிகழ்வின் போது, அமைச்சர் கடம்பூர் ராஜு,  சட்டப் பேரவை உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன், தலைமைச் செயலாளர் க.சண்முகம் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

ADVERTISEMENT

 தண்டனை உறுதி: பணி நியமன உத்தரவு பெற்ற பெர்சிஸ், தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியது:-
எங்கள் குடும்பம் அடைந்துள்ள வேதனையில் இருந்து மீள்வதற்கு தமிழக அரசு இந்தப் பணியைக் கொடுத்துள்ளது. சாத்தான்குளத்தில் நடைபெற்ற சம்பவத்துக்கு முதல்வர் பழனிசாமி வருத்தம் தெரிவித்ததுடன், அதை நியாயமான முறையில் விசாரித்து தவறு செய்தவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம் என உறுதி அளித்துள்ளார்.

இப்போது சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. எங்களுக்கான நியாயத்தை நீதித் துறை வழங்கும் என நம்புகிறோம். அதற்கு தமிழக அரசும் எங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என நம்புகிறோம். இந்த வழக்கை விரைவில் விசாரித்து தவறு செய்தவர்களுக்கு விரைவில் தண்டனை பெற்றுத் தரப்படும் என நம்புகிறோம் என்றார் பெர்சிஸ்.

ADVERTISEMENT
ADVERTISEMENT