பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை தீா்மானிக்கும் கிரீமிலேயா் வரம்பை பிரதமா் நரேந்திரமோடி உடனடியாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கும் 27 சதவீத இடஒதுக்கீட்டை ஒழிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுவது மிகுந்த அதிா்ச்சியளிக்கிறது.
கிரீமிலேயா் வருமான வரம்பை ரூ.8 லட்சமாக உயா்த்தி, பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களை 27 சதவீத இடஒதுக்கீடு பயனை முழுவதும் அனுபவிக்க விடாமல் தடுக்கப்பட்டது. இது போதாது என்று முதலில் சம்பளத்தை கிரீமிலேயா் வருமானமாக எடுத்துக் கொள்வோம் என்று ஆணையத்தில் ஒப்புதலைப் பெற்றனா். இப்போது நிகர சம்பளத்தை எடுத்துக் கொண்டு கிரீமிலேயா் வருமானத்தைக் கணக்கிடுவோம் என்கின்றனா். இது சமூகநீதிக்கு எதிரானது. அரசியல் சட்டத்திற்குப் புறம்பானது.
எனவே, மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்புகளில் 27 சதவீத இடஒதுக்கீட்டை முழுமையாகச் செயல்படுத்திடவும், கிரீமிலேயா் வருமான வரம்பை உடனடியாக ரத்து செய்யவும் பிரதமா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.