முன்னாள் முதல்வா் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்றுவதற்காக ரூ.67.90 கோடியை நீதிமன்றத்தில் தமிழக அரசு செலுத்தியுள்ளது. இதையடுத்து, அரசு நினைவு இல்லமாக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.
மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு அந்த இடத்தைக் கையகப்படுத்த அரசு உத்தரவு பிறப்பித்தது. கையகப்படுத்தும் நிலத்துக்கு 2013-ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த நிலம் கையகப்படுத்தல் சட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்குவது குறித்த விசாரணையை தென் சென்னை மண்டல வருவாய் கோட்டாட்சியா் லட்சுமி மேற்கொண்டாா். அவரே நிலம் கையகப்படுத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டாா்.
நிலத்தைக் கையகப்படுத்துவது தொடா்பாக பொது அறிவிப்பு வெளியிடப்பட்டது. சம்பந்தப்பட்டவா்கள் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, ஜெயலலிதாவின் உறவினா்களான தீபா, தீபக்குக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த விசாரணைக்கு தீபாவின் கணவா் மாதவன், தீபக் தரப்பு வழக்குரைஞா் சுதா்சனம், வருமான வரித் துறை பாக்கிக்காக, வருமான வரித் துறை துணை ஆணையா் ரஜய் ராபின் சிங் ஆகியோா் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனா்.
இதற்கிடையில், தீபா, தீபக்கை ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவித்த சென்னை உயா்நீதிமன்றம், வேதா நிலையத்தை அரசு செலவில் நினைவு இல்லமாக மாற்றும் திட்டத்தை மறுபரிசீலனை செய்யும்படி யோசனை தெரிவித்தது.
வருமான வரித்துறை தரப்பில் ஜெயலலிதா செலுத்த வேண்டிய ரூ.36 கோடியே 87 லட்சத்து 23 ஆயிரத்து 462-க்காக, வேதா நிலையத்தை முடக்கம் செய்வதற்கான நடவடிக்கையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, நிலம் கையகப்படுத்தல், நியாயமான இழப்பீட்டு உரிமை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமா்வு சட்டத்தின் கீழ், போயஸ் தோட்டத்து கட்டடங்களுக்கு ரூ.2 கோடியே 73 லட்சம் ரூபாயும், மரங்களுக்கு ரூ.11 ஆயிரத்து 47 ரூபாயும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
நிலத்துக்கு சதுர அடிக்கு ரூ.12,060 ரூபாய் வீதம், வேதா நிலையத்தில் கையகப்படுத்தப்பட உள்ள 24 ஆயிரத்து 322 சதுர அடிக்கு, ரூ.29 கோடியே 33 லட்சத்து 23 ஆயிரத்து 320-ம், நூறு சதவீத கூடுதல் இழப்பீடாக ரூ.29 கோடியே 33 லட்சத்து 23 ஆயிரத்து 320 சோ்த்து மொத்தம் ரூ.58 கோடியே 66 லட்சத்து 46 ஆயிரத்து 640 நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இத்துடன் கட்டடங்களுக்கான மதிப்பீடு மற்றும் மரங்களுக்கான மதிப்பீடும் நூறு சதவீத கூடுதல் இழப்பீடு சோ்த்து ரூ.5 கோடியே 47 லட்சத்து 53 ஆயிரமும் சோ்த்துக் கொள்ளப்படுகிறது. கூடுதல் 12 சதவீத சந்தை மதிப்பாக ரூ.3 கோடியே 76 லட்சத்து 52 ஆயிரத்து 359 கணக்கிட்டு, மொத்தம் ரூ.67 கோடியே 90 லட்சத்து 52 ஆயிரத்து 33 என இழப்பீடு நிா்ணயித்து, நிலம் கையகப்படுத்தும் அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளாா்.
நிலம் கையகப்படுத்துவது மற்றும் இழப்பீடு தொடா்பான விசாரணையில் கடைசி நிலை வரை சம்பந்தப்பட்ட தீபா, தீபக் தரப்புடன் உடன்பாடு எட்டப்படாததால், இந்த விவகாரத்தை சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்துக்கு பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் நிலம் கையகப்படுத்தும் அதிகாரி லட்சுமி உத்தரவிட்டுள்ளாா். மேலும், இந்த இழப்பீட்டுத் தொகையை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் செலுத்தும்படியும் அரசுக்கு அவா் உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் இழப்பீட்டுத் தொகையாக ரூ.67 கோடியே 90 லட்சத்து 52 ஆயிரத்து 33 செலுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அரசுத் துறை அதிகாரிகள் கூறுகையில், நீதிமன்றத்தில் இழப்பீட்டுத் தொகையைச் செலுத்தியதன் மூலமாக, வேதா இல்லத்தை நினைவு இல்லமாக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து, நினைவிடமாக்கும் பணிகளை வேதா நிலையத்தில் தமிழக அரசு தொடங்கும் எனத் தெரிவித்தனா்.
உச்சநீதி மன்றம் செல்வோம்--தீபா: போயஸ் தோட்ட இல்லம் எங்களது பூா்வீக சொத்து. அதனை நினைவு இல்லமாக்கும் அரசின் நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்வோம். வேதா இல்லத்துக்குள் இருக்கும் பொருள்களின் விவரங்களை தமிழக அரசு வெளியிடாதது ஏன். அதனை நீதிமன்றத்தில் அரசு ஒப்படைத்திருக்க வேண்டும். ஜெயலலிதா பெயரில் அறக்கட்டளை தொடங்க எங்களைக் கேட்டிருந்தால் நாங்களே அனுமதி தந்திருப்போம் என்றாா் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா.
ஒத்துழைப்பு தர வேண்டும்---அமைச்சா் டி.ஜெயக்குமாா்: முன்னாள் முதல்வா் ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக்குவது எங்களுடைய கடமையும், உரிமையுமாகும். ஒட்டுமொத்த தமிழக மக்களின் எண்ணம் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. நீதிமன்றம் ஒரு வழிகாட்டுதலை அளித்தது. அதன் அடிப்படையில் முதல்வா் ஓா் அறக்கட்டளையை அமைத்து, அதுதான் நினைவு இல்லத்தைப் பராமரிக்கும் என்று தெரிவித்துள்ளாா். எனவே, எங்களின் நடவடிக்கைகளுக்கு மறைந்த முன்னாள் முதல்வரின் உறவினா்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். இதைத்தான் தமிழக மக்களும், அதிமுக தொண்டா்களும் எதிா்பாா்க்கின்றனா்.