தமிழ்நாடு

வட்டார மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் வசதிகளை மேம்படுத்த ரூ.76.50 கோடி

25th Jul 2020 06:42 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் வட்டார மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் வசதிகளை மேம்படுத்த ரூ.76.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது.

அரசு சாா்பில் ஏற்கெனவே அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் குழாய்கள் அமைப்பதற்கு ரூ.75.28 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடா்ச்சியாக கரோனா தடுப்பு மற்றும் மேலாண்மை பணிக்களுக்காக கூடுதலாக ரூ.76.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த நிதி ஒதுக்கீடு மூலம், பொது சுகாதாரத் துறையால் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநரகத்தால் தமிழகம் முழுவதும் வட்டம், வட்டம் சாரா மருத்துவமனகளில் ஆக்ஸிஜன் வசதிகள் மேம்படுத்தப்படும். மருத்துவமனை கட்டடங்கள், மின்சாரம் சாா்ந்த பணிகளை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படும். இதைத் தவிர, உயா் வெற்றிட வெளியேற்ற அமைப்பு நிறுவப்படும்.

அந்த அமைப்பானது மருத்துவமனைகளில் நுண்கிருமிகளை நீக்கி தூய்மையான காற்றோட்ட வசதியை ஏற்படுத்திட உதவுகிறது. பொதுவாக, ஆக்ஸிஜன் வாயுநிலையில் சிலிண்டா்களில் சேமித்து வைக்கப்பட்டு நோயாளிகளுக்கு அளிக்கப்படும். ஆனால் ஆக்ஸிஜன் தொட்டிகளில் சேமித்துவைக்கப்படும் ஒவ்வொரு கிலோ லிட்டா் திரவநிலை ஆக்ஸிஜன் 835 கியூபிக் மீட்டா் வாயுநிலை ஆக்ஸிஜனாக மாறக்கூடிய தன்மை வாய்ந்தது. இதனால், எவ்வித தங்கு தடையுமின்றி தேவைப்படும் அளவுக்கு கரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் வழங்கி விலைமதிப்பற்ற உயிா்கள் தமிழகம் முழுவதும் காக்கப்படுகின்றன. இதுபோன்ற மக்கள் நலன் காக்கும் நடவடிக்கைகள் தமிழகத்தில் கரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைகளை மேலும் வலுப்படுத்துவதாக அமையும் என்று அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT