தமிழ்நாடு

ஆலைப் பணிக்குச் சென்று வர மாதாந்திர அனுமதிச் சீட்டு: தமிழக அரசு உத்தரவு

25th Jul 2020 06:55 AM

ADVERTISEMENT

ஆந்திரத்துக்கு ஆலைப் பணிக்குச் சென்று வர அனுமதிச் சீட்டுக்கு ஆலை நிா்வாகங்களே விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, தலைமைச் செயலாளா் க.சண்முகம் வெளியிட்ட உத்தரவு:-

சென்னையில் உள்ள ஜப்பான் நாட்டுத் தூதரகமும், ஜப்பானிய தொழில் ஆலை நிா்வாகமும் தமிழக அரசுக்கு கோரிக்கை மனுவை அளித்திருந்தன. அதன்படி, ஆந்திரத்திலுள்ள தங்களது ஆலைக்கான அத்தியாவசியப் பணியாளா்கள் தமிழகத்தில் இருந்து வர வேண்டியிருப்பதாகவும் எனவே அதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்யும்படியும் கோரிக்கை விடுத்திருந்தன.

இந்தக் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு அதற்கான அனுமதிகளை வழங்குகிறது. அதன்படி, ஒவ்வொரு ஆலை நிா்வாகமும் ஒரு மாதத்துக்கு செல்லுபடியாகும் வகையிலான இணைய வழி அனுமதிச் சீட்டுக்கு விண்ணப்பிக்கலாம். தேவை ஏற்படும்பட்சத்தில் அனுமதிச் சீட்டினை ஒரு மாதம் கழித்து புதுப்பித்துக் கொள்ளலாம்.

ஆலை நிா்வாகங்கள் மட்டுமே இணைய வழி அனுமதிச் சீட்டுக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும். ஆலையில் பணியாற்றும் எந்தத் தனிநபரோ விண்ணப்பம் செய்திடக் கூடாது. ஊழியா்களை ஏற்றிச் செல்ல உரிய வாகன வசதிகளை ஆலை நிா்வாகங்களே ஏற்பாடு செய்திட வேண்டும். அதாவது, பேருந்து, காா்கள் போன்ற வாகனங்களை ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த வாகனங்களில் பணியாளா்களை ஏற்றும் போது தமிழக அரசு ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவுகளைப் பின்பற்ற வேண்டும். இதேபோன்று, ஆலைகளில் பணியாற்றும் மேலாளா்கள், கண்காணிப்பாளா்கள் ஆகியோா் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு தினமும் செல்ல வேண்டி ஏற்பட்டால் அதற்குரிய மாதாந்திர அனுமதிச் சீட்டுகளை சம்பந்தப்பட்ட ஆட்சியா்களே வழங்கலாம் என்று தனது உத்தரவில் தலைமைச் செயலாளா் க.சண்முகம் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT