தமிழ்நாடு

நியாய விலைக்கடைகளில் இலவச முகக்கவசம்: அமைச்சர் காமராஜ் அறிவிப்பு

25th Jul 2020 03:58 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் நியாய விலைக் கடைகள் மூலம் இலவசமாக முகக்கவசம் வழங்கப்படும் என தமிழக உணவுத் துறை அமைச்சர் அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ருக்மணி பாளையம் நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு முகாமை  தொடக்கி வைத்த தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், “தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடுகளுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை 73 சதவீதம் பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி இருக்கின்றனர்.” என்றார்.

மேலும் பேசிய அவர், “தமிழகம் முழுவதும் 72 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். சென்னையில் மார்ச் 24 ஆம் தேதி ஊரடங்கு காலத்தில் இருந்து அரசு எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளால் கரோனா  தொற்றால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன் .தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ளது.” எனத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, “பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் வெளியே செல்வது தான் மாவட்டங்களில் சில இடங்களில் அவ்வப்போது கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதற்கு காரணம். எனவே, பொதுமக்கள் முகக் கவசம் அணிய வேண்டும் என முதல்வர்  வலியுறுத்தி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து வருகிறார்.

ADVERTISEMENT

முகக்கவசம் அணியாமல் இருப்பது மிகப்பெரிய குற்றம் . நோய் தொற்று பரப்புவதற்கு நாமும் காரணமாக அமைந்து விடக் கூடாது என்பதில் ஒவ்வொருவரும் கவனமுடன் இருக்க வேண்டும்.

திருவாரூர் மாவட்டத்தில் 1400 படுக்கை வசதியுடன் கூடிய சிறப்பு முகாம் தயார் நிலையில் உள்ளது.

கரோனா தொற்றை  கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகள் மூலம், விரைவில் இலவசமாக முகக் கவசம் வழங்கப்படும்” என்றார்.


முகாமிற்கு , மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் தலைமை வகித்தார்.
முகாமில் , பரிசோதனைக்கு வந்தவர்களின் உடல் வெப்பநிலை கட்டறியப்பட்டதுடன் பொதுமக்களுக்கு  கபசுரக் குடிநீர் , சத்து மாத்திரை , முகக்கவசம் ஆகியவை வழங்கப்பட்டது.

Tags : Corona virus
ADVERTISEMENT
ADVERTISEMENT