மதுரை: குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா முகக் கவசம் திங்கள்கிழமை (ஜூலை 27) முதல் வழங்கப்பட உள்ளது என்று தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கச்சைக்கட்டியில் ஊராட்சி மன்ற புதிய கட்டடத்தை அமைச்சர் உதயகுமார் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
பின்னர் அங்கு நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை அவர் பார்வையிட்டார்.
அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியது: கரோனா தொற்று பாதிப்பைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்துப் பகுதிகளிலும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
கரோனா பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை அளிப்பதற்காக, கரோனா பரிசோதனைகள் அதிகளவில் மேற்கொள்ளப்படுகின்றன.
கரோனா தொற்று பாதிப்புக்கான தடுப்பு மருந்துகள் கிடைக்கும் வரை, பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அத்தியாவசியத் தேவைக்காக மட்டுமே முகக் கவசம் அணிந்து வெளியே செல்ல வேண்டும்.
தமிழகம் முழுவதும் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா முகக் கவசம் வழங்குவதை தமிழக முதல்வர் திங்கள்கிழமை தொடங்கி வைக்க உள்ளார் என்றார்.