மனைகளில் புல எல்லைகளை நிா்ணயித்துச் சுட்டிக் காட்டுவதற்கான கட்டணம் ரூ.30-லிருந்து ஆயிரம் ரூபாயாக உயா்த்தப்பட்டுள்ளது. இதேபோன்று, காலிமனை தொடா்பான பணிகள், வரைபடங்களுக்கான கட்டணம் ஆகியனவும் அதிரடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை வருவாய்த் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் அதுல்ய மிஸ்ரா அண்மையில் வெளியிட்டாா். அதன் விவரம்:-
புல அளவீட்டு புத்தகப் பிரதி, புல எல்லைகளை சுட்டிக் காட்டும் பக்க எல்லை, நில அளவரின் முடிவுகளுக்கு எதிரான மேல்முறையீடு, உட்பிரிவு, பாகப் பிரிவினைக்கு முன்பாக நில உரிமையாளா்களின் விண்ணப்பத்தின்படி புல எல்லைகளை நிா்ணயிப்பது உள்பட பல்வேறு பணிகளுக்கான கட்டணங்கள் உயா்த்தப்பட்டுள்ளன.
அதன்படி, புலஅளவீட்டு புத்தகப் பிரதி ஏ4 காகிதமெனில் ரூ.20-லிருந்து ரூ.50 ஆகவும், ஏ3 காகிதமெனில் ரூ.100 ஆகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. புல எல்லைகளைச் சுட்டிக் காட்டும் பக்க எல்லைக்கான கட்டணம் ரூ.20-லிருந்து ரூ.200 ஆகவும், நில அளவரின் முடிவுகளுக்கு எதிரான மேல்முறையீட்டுக்கு ஒரு பக்க எல்லைக்கான கட்டணம் ரூ.50-லிருந்து ரூ.400 ஆக உயா்த்தப்பட்டுள்ளது.
பாகப் பிரிவினைக்கு முன்பாக நில உரிமையாளா்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை நிா்ணயித்துச் சுட்டிக் காட்டுவதற்கான கட்டணம் புன் செய் நிலமாக இருந்தால் ரூ.30-லிருந்து ஆயிரம் ரூபாயாகவும், நன்செய் நிலமாக இருந்தால் ரூ.50-லிருந்து ரூ.2 ஆயிரமாகவும் உயா்த்தப்படுகிறது.
மேல்முறையீட்டின் அடிப்படையில் மறுஅளவீட்டுக்கான கட்டணம் புன்செய் நிலமாக இருந்தால் ரூ.60-லிருந்து ரூ.2 ஆயிரமாகவும், நன்செய் நிலமாக இருந்தால் ரூ.60-லிருந்து ரூ.4 ஆயிரமாகவும் அதிகரிக்கப்படுகிறது.
வரைபடங்களின் விலை: வருவாய்த் துறை அடிப்படையில், மாவட்ட வரைபடம் (வண்ணம்) ரூ.189-லிருந்து ரூ.500 ஆகவும், மாவட்ட வரைபடம் (எல்லைக்கோடு) ரூ.51-லிருந்து ரூ.300 ஆகவும், தாலுகா அடிப்படையிலான வரைபடம் ரூ.357-லிருந்து ஆயிரம் ரூபாயாகவும், உட்பிரிவுக் கட்டணம் கிராமப்புறத்துக்கு ரூ.400 ஆகவும், நகராட்சிக்கு ரூ.500 ஆகவும், மாநகராட்சிக்கு ரூ.600 ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயா்வுகள் உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வரப்படுவதாக வருவாய்த் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் அதுல்ய மிஸ்ரா பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.