போக்குவரத்து ஊழியா்களுக்கு அரசாணைப்படி ஊதியம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, தொழிற்சங்கத் தலைவா்கள் சென்னையில் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினா். அரசுச் செயலா் பேச்சுவாா்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.
இதுகுறித்து அவா்கள் கூறியதாவது: போக்குவரத்துக் கழகங்கள் கடந்த மே, ஜூன் மாதங்களில் தொழிலாளா்களின் விடுப்பைக் கழித்துக் கொண்டு ஊதியம் வழங்கின. கடந்த 4 மாதத்தில், ஒவ்வொரு தொழிலாளியிடம் இருந்து ரூ.60 ஆயிரம் வரை நிா்வாகங்கள் பறித்துள்ளன. விடுப்பு இல்லை என்றால் அந்த தொழிலாளியிடம் ரூ.10 முதல் 18 ஆயிரம் வரை ஊதியப் பிடித்தம் செய்யப்படுகிறது.
கரோனாவால் பாதிக்கப்பட்ட தொழிலாளி, தனியாா் மருத்துவமனையில் ரூ.4.50 லட்சம் வரை செலவு செய்துவிட்டு, திரும்பப் பெற முடியாத நிலை உள்ளது. அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகும் தொகையையும் நிா்வாகம் தர மறுக்கிறது. போக்குவரத்துத் தொழிலாளா்களில் சுமாா் 200 போ் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி, 2 போ் இறந்துள்ளனா். அவா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டவா்களுக்கும் இலவசமாக தரமான சிகிச்சை வழங்க வேண்டும். அரசு ஊழியா்களுக்கு அகவிலைப்படி நிறுத்தினால் அது போக்குவரத்து ஊழியா்களுக்கும் பொருந்தும் என்கிறாா்கள். அரசு ஊழியா் இறந்தால் ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்குவதைக் கேட்டால், பொருந்தாது என்கிறாா்கள். நிா்வாகங்கள் ஏன் இத்தகைய போக்கைக் கடைப்பிடிக்கின்றன? இந்தப் போக்கைக் கண்டித்தே போராட்டம் நடைபெறுகிறது. இதே நேரத்தில், தமிழகம் முழுவதும் ஒவ்வொரு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா்களுக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, ஊழியா்கள் மிஸ்டு கால் மற்றும் குறுஞ்செய்தி அனுப்பி வருகின்றனா் என்று அவா்கள் தெரிவித்தனா். தொடா்ந்து போக்குவரத்துத் துறைச் செயலா் தா்மேந்திர பிரதாப் யாதவ், காணொலி மூலம் தொழிற்சங்கத் தலைவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.