தமிழ்நாடு

சத்துணவு மையங்கள் மூலம் ஏழை மாணவர்களுக்கு விட்டமின் மருந்துகள்: உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

13th Jul 2020 01:58 PM

ADVERTISEMENT

சத்துணவு மையங்கள் மூலம் ஏழை மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்  விட்டமின் மருந்துகள் வழங்குவது போன்ற திட்டங்களை வகுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் சுதா தாக்கல் செய்த பொது நல மனுவில், கரோனா நோய்த் தொற்று நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில், நோய்த் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள
சத்தான மற்றும் ஊட்டச்சத்து அதிகமாக உள்ள உணவை உட்கொள்ள வேண்டும் என உலக சுகாதார நிறுவனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் அறிவுறுத்தியுள்ளன. எனவே, தமிழகத்தில் செயல்படும் அனைத்து அம்மா உணவகங்களிலும் இலவச முட்டைகள் வழங்க வேண்டும். மேலும், ஏழை எளிய மாணவர்களுக்கு சத்துணவு வழங்க உரிய திட்டம் வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். அப்போது மனுதாரர் தரப்பில் , ஏழை எளிய மக்களுக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்படாமல் தடுக்க தமிழகம் முழுவதும் உள்ள 407 அம்மா உணவகங்களில் ஊட்டச்சத்து நிறைந்த முட்டைகளை இலவசமாக வழங்க வேண்டும். மேலும், தற்போது பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், மாநிலம் முழுவதும் உள்ள 43 ஆயிரத்து 243 சத்துணவு மையங்கள் மூலம் மாணவர்களுக்கு சத்துணவு வழங்க திட்டம் வகுக்க வேண்டும் என வாதிட்டார்.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஏழை எளிய மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சத்துணவு மையங்கள் மூலம் விட்டமின் மருந்துகள் வழங்குவது போன்ற திட்டங்களை வகுக்க தமிழக அரசுக்கு அறிவுறுத்தினர். மேலும் இந்த மனு தொடர்பாக வரும் ஜூலை 20 ஆம் தேதிக்குள் தமிழக அரசு விளக்கமளிக்க  உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT