தமிழ்நாடு

தமிழகத்தில் ஜூலை 31-ஆம் தேதி வரை பேருந்துகள் இயங்காது: தமிழக அரசு

13th Jul 2020 05:03 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் ஜூலை 31-ஆம் தேதி வரை பேருந்துகள் இயங்காது என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இன்னும் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: 

கரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், 24.3.2020 முதல் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து கரோனா தொற்றின் நிலைமையை கருத்தில் கொண்டும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், சில தளர்வுகளுடன் 31.7.2020 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

ADVERTISEMENT

கரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுக்க அரசு, தொடர்ந்து தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வரும் நிலையில், கரோனா நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன், மாநிலத்தில் தனியார் மற்றும் அரசு பொது பேருந்து போக்குவரத்து சேவை 1.7.2020 முதல் 15.7.2020 வரை நிறுத்தப்பட்டது.

தற்போது, தமிழ்நாட்டில், கரோனா நோய்த் தொற்றை தொடர்ந்து கட்டுப்படுத்தும் நோக்குடன் 31.7.2020 வரை தனியார் மற்றும் அரசு பொது பேருந்து போக்குவரத்து சேவை இயக்கப்படாது. தமிழக அரசின் கரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT