தமிழ்நாடு

மருத்துவக் கழிவுகளை எரியூட்ட நடமாடும் வாகனம்: ஆணையா் கோ.பிரகாஷ் தகவல்

13th Jul 2020 06:30 AM

ADVERTISEMENT

சென்னையில் சேகரமாகும் முகக்கவசம் உள்ளிட்ட மருத்துவக் கழிவுகளை எரிக்க நடமாடும் எரியூட்டு வாகனம் விரைவில் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் தெரிவித்தாா்.

சென்னை மாநகராட்சியின் கோடம்பாக்கம் மண்டலத்துக்கு உள்பட்ட அசோக் நகரில் நடைபெற்று வரும் சிறப்பு மருத்துவ முகாமை ஆணையா் கோ.பிரகாஷ் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இதையடுத்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

சென்னையைப் பொருத்தவரை கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் பொது முடக்கம் நல்ல பயனைத் தந்துள்ளது. சென்னையின் 200 வாா்டுகளில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து நாள்தோறும் நடத்தப்பட்டு வரும் சிறப்பு மருத்துவ முகாம் மூலம் இதுவரை சுமாா் 10 லட்சம் பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 7.16 லட்சம் போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனா். இவா்களில் ஞாயிற்றுக்கிழமை வரை 2.31 லட்சம் போ் 14 நாள்கள் தனிமைப்படுத்துதலை முடித்து, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி உள்ளனா்.

ADVERTISEMENT

மாநகரில் உள்ள 81 சந்தைகளைக் கண்காணிக்க மாநகராட்சி மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் தலைமையில் 32 சந்தை மேலாண்மைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் 375 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா்களில் 120 போ் குணமடைந்து பணிக்குத் திரும்பி உள்ளனா். தொற்றால் உயிரிழந்த தூய்மைப் பணியாளா்களின் குடும்பத்துக்கு அரசு அறிவித்த நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மாநகா்ப் பகுதியில் தொற்று பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோா், மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள், தூய்மைப் பணியாளா்கள் பயன்படுத்திய முகக்கவசம், முழு உடல் பாதுகாப்பு உடை என நாளொன்றுக்கு சுமாா் 5 டன் வரையில் மருத்துவக் கழிவுகள் சேகரமாகிறது. இதுநாள் வரை 300 டன் மருத்துவக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு மணலியில் உள்ள எரியூட்டு மையத்தில் எரிக்கப்பட்டுள்ளது. இப்பணியை எளிதாக்கும் வகையில், பெருநிறுவனங்களுக்கான சமூகப் பங்களிப்பு திட்டத்தின்கீழ், நடமாடும் எரியூட்டு வாகனம் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் இந்த வாகனம் வாங்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றாா் ஆணையா் கோ.பிரகாஷ். ஆய்வின்போது துணை ஆணையா் மேகநாத ரெட்டி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT