தமிழ்நாடு

கரோனா தடுப்பு பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்த தடை கோரிய மனு தள்ளுபடி

13th Jul 2020 01:11 PM

ADVERTISEMENT

கரோனா நோய்த் தொற்று பணிகளில் பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்தும் சென்னை மாநகராட்சியின் உத்தரவுக்கு தடை கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சென்னை மாவட்ட செயலாளர் சீனிவாசன் தாக்கல் செய்த மனுவில், சென்னை மாநகராட்சி கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க, நோய்த் தொற்று பாதித்தவர்களை வீடுகளில் தனிமைப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை  மேற்கொண்டு வருகிறது. இந்த பணிகளில் சென்னை மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்த முடிவு செய்து உத்தரவும் பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். அப்போது மனுதாரர் தரப்பில், கரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டத்தை அமல்படுத்தவும், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கும் பணியில் 200 ஆசிரியர்களை ஈடுபடுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. ஏற்கனவே அனுபவமில்லாத இந்த பணியில்  ஈடுபட்ட ஆசிரியை ஒருவர்  கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் அவரது குடும்பத்தினர் சிரமத்துக்குள்ளாவதாக தெரிவிக்கப்பட்டது. 

எனவே கரோனா தடுப்பு பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்த மாநகராட்சி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்தார். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இயற்கையாகவே ஆசிரியர்கள் என்பவர்கள் தலைமை பொறுப்பு கொண்டவர்கள். இது போன்ற பேரிடர் காலத்தில் ஆசிரியர்களின் சேவையை நீதிமன்றம் எதிர்பார்ப்பதாக தெரிவித்தனர். மேலும் ஆசிரியர்கள் பேரிடர் காலங்களில் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக  இருக்க வேண்டும். கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் ஆசிரியர்களுக்கு போதிய பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT