தமிழ்நாடு

புழல் சிறையிலிருந்து திருச்சி அழைத்துவரப்பட்ட கைதிக்கு கரோனா

13th Jul 2020 06:35 PM

ADVERTISEMENT

 

புழல் சிறையில் இருந்து திருச்சி மத்திய சிறைக்கு அழைக்கப்பட்டு வந்த கைதிக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால் திங்கள்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏ பாலன் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். பாதுகாப்பு கருதி கைதிகள் 4 பேரையும் கடந்த 10 ஆம் தேதி திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர். முன்னதாக, அவர்கள் நான்கு பேருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

பரிசோதனை முடிவு வெளியாவதற்கு முன்னரே புழல் சிறையிலிருந்து திருச்சி மத்திய சிறைக்கு கடந்த வெள்ளிக்கிழமை வருகை புரிந்தனர். இந்நிலையில், 4 பேரில் ஒரு கைதிக்கு சுவாசக்கோளாறு ஏற்பட்டதால், சிறை வளாக மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

ADVERTISEMENT

இதுதொடர்பாக புழல் சிறையில் விசாரித்ததில்,  ஞாயிற்றுக்கிழமை வெளியான முடிவில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவரை திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் கரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். 

மேலும், அக்கைதியோடு தொடர்பில் இருந்த மற்ற கைதிகளுக்கும், உடன் சென்ற காவலர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் யாருக்கும் கரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டதை அடுத்து அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக திருச்சி சரக சிறைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT