தமிழ்நாடு

வேலூரில் 7 நாட்களில் 3 ஆயிரத்தைக் கடந்தது பாதிப்பு: ஒரே நாளில் 209 பேருக்குத் தொற்று

DIN

வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு 7 நாட்களில் 2 ஆயிரத்திலிருந்து 3 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கடந்த ஜூலை 6ஆம் தேதி 2,132ஆக இருந்த கரோனா பாதிப்பு திங்கள்கிழமை 3,137ஆக உயர்ந்துள்ளது. இதன்படி, திங்கள் கிழமை ஒரேநாளில் 209 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையைத் தொடர்ந்து வேலூர் மாவட்டத்திலும் கரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை 2,928 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், திங்கள்கிழமை இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிகமாக 209 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,137}ஆக அதிகரித்துள்ளது.

மாவட்டத்தில் மே 31-ஆம் தேதி நிலவரப்படி இந்நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 48ஆகவும், அதில் பலியானோர் எண்ணிக்கை 2-ஆகவும் மட்டுமே இருந்தது. அதன்பிறகு கரோனா தொற்று பாதிப்பு வேகமாக அதிகரித்த தன் விளைவாக ஜூன் 26-ஆம் தேதியில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,019-ஆகவும், பலியானோர் எண்ணிக்கை 8-ஆகவும், இதன்தொடர்ச்சியாக ஜூன் 6ஆம் தேதியில் பாதிப்பு எண் 2,132ஆகவும், 18ஆகவும் உயர்ந்தது. இந்நிலையில், தற்போது கரோனா பாதிப்பு 3 ஆயிரத்தைக் கடந்திருப்பதுடன் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 29ஆக உயர்ந்துள்ளது. இதன்படி, வேலூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு முதற்கட்டமாக ஆயிரத்தைக் கடக்க 26 நாள்களான நிலையில், அடுத்த 10 நாள்களுக்குள் 2 ஆயிரத்தையும், அதற்கடுத்த 7 நாட்களுக்குள் 3 ஆயிரத்தையும் கடந்துள்ளது. 

சென்னையில் பொது முடக்கத்தில் தளர்வு செய்யப்பட்டதை அடுத்து அங்கிருந்து எவ்வித முறையான அனுமதியுமின்றி குடும்பம் குடும்பாக ஏராளமானோர் வெளியேறினர். அவர்கள் மூலமாக வேலூர் மாவட்டத்தில் ஜூன் மாதத்தில் கரோனா தொற்று வேக மாக அதிகரிக்கத் தொடங்கியது. தவிர, மாநகரிலுள்ள நேதாஜி மார்க்கெட், மண்டித் தெரு, லாங்கு பஜார் உள்ளிட்ட முக்கியக்கடை வீதிகள், பொதுஇடங்களில் மக்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைப் பின்பற்றாமலும் நடமாடி வந்தனர். இதுவும் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகரிக்க முக்கியக் காரணமாகியது.

இதையடுத்து மாவட்டம் முழுவதும் பொதுமுடக்கத்தில் மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் வேலூர் மாநகர பகுதியில் தொற்று பரவும் வேகம் குறைந்தது. அதேசமயம், குடியாத்தம், பள்ளிகொண்டா என மாவட்டத்தின் பிற பகுதிகளில் தொற்று அதிகரித்து வருவதுடன், மருத்துவ பரிசோதனையும் அதிகரிக்கப்பட்டிருப்பதும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க முக்கியக் காரணம் என்று மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் மணிவண்ணன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியது..

தற்போது மாவட்டத்தில் கரோனா பாதிப்பைத் தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளதுடன், வேலூர் மாநகராட்சி, குடியாத்தம், பேர்ணாம்பட்டு நகராட்சிப் பகுதிகளில் வீடு வீடாக களப்பணியாளர்கள் அனுப்பப்பட்டு காய்ச்சல், சளி, மூச்சுத் திணறல், இருமல், சர்க்கரை நோய் உள்ளிட்ட பாதிப்புகள் உள்ளவர்களைக் கணக்கெடுக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.

இதன் மூலம், தொற்றாளர்களும், அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களும் விரைவில் அடையாளம் காணப்பட்டு வருவதால் புதிதாக நோய்த் தொற்று பரவுவது குறைந்து வருகிறது. எனினும், கரோனாவால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தவர்களுக்கு மீண்டும் நோய்த் தொற்று வருமா என்பதற்கு உறுதியான பதில் அளிக்க இயலாது. இது புதிய நோய்த் தொற்று என்பதால் ஓரிரு மாதங்களுக்குப் பிறகு உறுதியாகத் தெரியவரும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களை நம்பித்தான் தோ்தலில் நிற்கிறோம் -சீமான்

இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி பலி

காரைக்கால் அம்மையாருக்கு குருபூஜை

கண்ணன் அலங்காரத்தில் மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி

தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT