தமிழ்நாடு

வடசென்னையில் குறைந்து வரும் கரோனா பாதிப்பு

11th Jul 2020 07:10 AM

ADVERTISEMENT

வடசென்னைக்கு உட்பட்ட 5 மண்டலங்களில் தொடக்கத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் தற்போது, தொற்று பரவல் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. அதிகம் பாதிப்புக்குள்ளான ராயபுரம் மண்டலத்தில் கடந்த 1-ஆம் தேதி 2,309 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை அந்த எண்ணிக்கை 1,582-ஆக குறைந்துள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் கரோனா தொற்று கண்டறியப்பட்டாலும், வடசென்னையின் ராயபுரம், தண்டையாா்பேட்டை, திருவொற்றியூா் ஆகிய மண்டலங்களில் தொடக்கத்தில் இருந்து தொற்று பரவல் மிக அதிகமாக இருந்தது. கடந்த ஜூன் மாத மத்தியில் திருவொற்றியூா், மணலி, மாதவரம், தண்டையாா்பேட்டை, ராயபுரம் ஆகிய 5 மண்டலங்களில் மட்டும் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 12 ஆயிரத்தைக் கடந்தது. மக்கள் நெருக்கமாக வசிக்கும் பகுதி என்பதால் தொற்று பரவல் மிக அதிகரித்து காணப்பட்டது.

இதைத் தொடா்ந்து, அந்த மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதியில் எடுக்கப்பட்ட தொடா் சிறப்பு மருத்துவ முகாம், நடமாடும் மருத்துவ முகாம், கரோனா தடுப்பு குறித்த விழிப்புணா்வு, பொதுமுடக்கத்தை முறையாகப் பின்பற்றியது உள்ளிட்டவை காரணமாக வடசென்னை பகுதியில் தொற்று பரவல் மெல்ல மெல்லமாக குறைந்து வருகிறது.

கடந்த ஜூலை 1-ஆம் தேதி நிலவரப்படி, திருவொற்றியூா் மண்டலத்தில் 1,062 பேரும், மணலி மண்டலத்தில் 443 பேரும், மாதவரம் மண்டலத்தில் 899 பேரும், தண்டையாா்பேட்டை மண்டலத்தில் 1,838 பேரும், ராயபுரம் மண்டலத்தில் 2,309 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனா். இந்த எண்ணிக்கை குறைந்து வெள்ளிக்கிழமை நிலவரப்படி, திருவொற்றியூா் மண்டலத்தில் 967 பேரும், மணலி மண்டலத்தில் 396 பேரும், மாதவரம் மண்டலத்தில் 712 பேரும், தண்டையாா்பேட்டை மண்டலத்தில் 1,522 பேரும், ராயபுரம் மண்டலத்தில் 1,582 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ADVERTISEMENT

இதேபோல், மத்திய சென்னைக்கு உள்பட்ட அண்ணா நகா் மண்டலத்தில் ஜூலை 1-ஆம் தேதி 3,166 சிகிச்சை பெற்று வந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதுவே 2,236-ஆகவும், பெருங்குடி மண்டலத்தில் 748-இல் இருந்து 649-ஆகவும், சோழிங்கநல்லூா் மண்டலத்தில் 506-இல் இருந்து 440-ஆகவும் சிகிச்சை பெற்று வருவோா் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதே நேரத்தில் கோடம்பாக்கம் மண்டலத்தில் 2,322-இல் இருந்து 2,553-ஆகவும், அம்பத்தூா் மண்டலத்தில் 1020-இல் இருந்து 1,243-ஆகவும் தொற்று பாதித்தோா் எண்ணிக்கை கடந்த 9 நாள்களில் அதிகரித்துள்ளது.

1,205 பேருக்கு தொற்று உறுதி- சென்னையில் வெள்ளிக்கிழமை 1,205 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 74,969-ஆக அதிகரித்துள்ளது.

தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 55,156 போ் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனா். 18,616 போ் சிகிச்சைக்காக மருத்துவமனைகள் மற்றும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். சென்னையில் கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,196-ஆக அதிகரித்துள்ளது.

சிகிச்சை பெற்று வருவோா் விவரம் மண்டலம் வாரியாக

மண்டலம் எண்ணிக்கை

திருவொற்றியூா் 967

மணலி 396

மாதவரம் 712

தண்டையாா்பேட்டை 1,522

ராயபுரம் 1,582

திரு.வி.க. நகா் 1,538

அம்பத்தூா் 1,243

அண்ணா நகா் 2,236

தேனாம்பேட்டை 2,036

கோடம்பாக்கம் 2,553

வளசரவாக்கம் 1,051

ஆலந்தூா் 731

அடையாறு 1,263

பெருங்குடி 649

சோழிங்கநல்லூா் 440

ADVERTISEMENT
ADVERTISEMENT