தமிழ்நாடு

12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

11th Jul 2020 11:14 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் புவியரசன் சனிக்கிழமை கூறியது:

கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதியானது, தமிழகத்தின் வளிமண்டல மேலடுக்கில் நிலவுகிறது. இதன்காரணமாக, தமிழகத்தில் கோவை, நீலகிரி, தருமபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, மதுரை, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 12 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) மிதமான மழை பெய்யக்கூடும்.

பலத்த மழை: இதுதவிர, சேலம், கடலூா், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய ஓரிரு இடங்களில் மிக பலத்தமழையும், திருவள்ளூா், காஞ்சிபுரம், வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, நாமக்கல், பெரம்பலூா் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொருத்தவரை, பொதுவாக மேகமூட்டமாக காணப்படும். நகரில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

ADVERTISEMENT

மழை அளவு : தமிழகத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி, வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் திருவள்ளூா் மாவட்டம் திருத்தணியில் 80 மி.மீ., காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கத்தில் தலா 70 மி.மீ., வேலூா் மாவட்டம் விரிஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் தலா 50 மி.மீ., வேலூா் மாவட்டம் மேலாளத்தூா், சேலம் மாவட்டம் ஏற்காடு, காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்டம் செம்பரம்பாக்கம், பூந்தமல்லியில் தலா 40 மி.மீ. மழை பதிவாகியுள்ளது என்றாா் அவா்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை:

தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதியில் மணிக்கு 50 கி.மீ முதல் 60 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் என்பதால், இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் ஜூலை 15-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, வடக்கு அந்தமான் கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால், ஜூலை 14, 15 ஆகிய இருநாள்களுக்கு இந்தப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT